`மக்களுக்கு தெரியாத ஆர்எஸ்எஸ்சை இப்படி திமுக வளர்க்கிறதே?'- ஆதங்கப்படும் நடிகை கஸ்தூரி

தஞ்சாவூர் மேயருடன் நடிகை கஸ்தூரி
தஞ்சாவூர் மேயருடன் நடிகை கஸ்தூரி

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்திருப்பதன் மூலம் அந்த அமைப்பை திமுக தான் வளர்த்து விடுகிறது என்று நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தஞ்சாவூருக்கு வந்திருந்த  நடிகை கஸ்தூரி,  தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று  மேயர் சண்.ராமநாதன் மற்றும் ஆணையர் க.சரவணக்குமார் ஆகியோரைச்  சந்தித்தார்.  கஸ்தூரிக்கு  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி. ``தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை அறிந்து மேயரையும், ஆணையரையும் சந்திக்க வந்தேன். இரு இளைஞர்களின் செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்திலேயே முன்மாதிரி மாநகராட்சியாக உள்ளது பாராட்டத்தக்கது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்திருப்பதன் மூலம், அந்த  அமைப்பை திமுகதான் மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறது. ஒரு செயலை முடக்கி வைக்க முற்படும் போது தான் அது வேகமாக வளரும். அதுபோல ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை மக்களுக்கு தெரியுமா தெரியாதா என்ற நிலையில் அதன் ஊர்வலத்துக்கு  தடை விதித்திருப்பதன் மூலம் அது வளர்வதற்கு திமுக மறைமுகமாக உதவி செய்கிறது.  வெளிப்படையாக சொன்னால் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்து வளர திமுக என்ற மூன்றெழுத்து உதவுகிறது.   

பெண்களுக்கு பேருந்தில்  இலவச பயணம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபோது, அதை  வரவேற்றதில் நானும் ஒருவர். பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் என்கிற நல்தொரு திட்டம். அதை தி.மு.க. அமைச்சர் கொச்சையாகப் பேசி இருக்கக் கூடாது. அரசு எந்த விஷயத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் எல்லா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அப்படி இருக்கும் போது மக்களுக்கு ஒரு திட்டத்தைச் செய்து விட்டு, அதை மக்கள் வாங்கிக் கொள்ளுகிறார்கள் என சுட்டிக்காட்டுவது மிக பெரிய தவறு. 

இந்நிலையில், ஓசி பஸ் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது மிக பெரிய தவறு. பொன்முடி எப்போதும் உடைத்துப் பேசக்கூடிய நபர். அப்படிப் பேசியதை நியாயப்படுத்த முடியாது. ஓசி பயணம் என சொல்லாமல் இலவசம் என கூறி இருக்கலாம். ஓசி பஸ் என பெண்களை கூறும் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும் பெண் வயிற்றில் ஓசியில் இருந்து  பிறந்தவர்கள் தான்.  அதற்காக பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில்தான் அமைச்சர்கள் பேச வேண்டும். பெண்களை உதாசீனம் செய்வதுபோல பேசக் கூடாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, அவரின் செயல்பாடுகளால் மிகவும் கவரப்பட்டேன். அதிரடியாக அவர் பல நல்ல விஷயங்களைச் சென்னை மாநகரத்திற்குச் செய்தார். முதல்வராக அதை போன்று திட்டங்களைத் தடாலடியாக செய்வார் என நினைத்தேன். நினைத்த அளவிற்கு இல்லை. 

இருப்பினும், ஓரளவிற்கு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான திட்டங்களை நன்றாக செயல்படுத்துகிறார். ஆனால் ஸ்டாலின் நினைப்பது போல மற்றவர்கள் செயல்படுகிறார்களா என்பதில் ஒரு புள்ளி இருக்கிறது. செயல் அதிகம், பேச்சு குறைவு என இருந்தால் தி.மு.க. ஆட்சியை பாராட்டலாம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in