
பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரின் பேரில் நடிகையும், பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதாக கூறி நடிகையும், பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை வேண்டும் என ஆக.5-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்தார். இதற்குப் பதிலடியாக சினேகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் செய்தார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அக்.19-ம் தேதிக்குள் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.