
பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கெளதமி அறிவித்துள்ளார். மூத்த நிர்வாகிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
பிரபல நடிகையான கௌதமி பாஜகவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அண்மையில் அன்பழகன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் மோசடி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்பழகனுக்கு ஆதரவாக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகர் கௌதமி இன்று திடீரென அறிவித்து இருக்கிறார். மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்து உள்ளேன் என்றும், 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை என்றும் பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அன்பழகன் என்பவருக்கு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடடத்திற்கு அவர் தனது விலகல் கடிதத்தை அனுப்பி இருக்கிறார். இது குறித்து பாஜக மூத்த நிர்வாகி இராம சீனிவாசன் கூறுகையில், அவர் கட்சியில் இருந்து விலகியது பற்றி கவலையில்லை என்றும் உங்களை வாழ்த்தி வழியனுப்பிறோம் என்றும் தெரிவித்தார்.