நடிகை கன்னம் ஒப்பீடு: அமைச்சர் மன்னிப்பு கேட்டும் அடங்காத சர்ச்சை

நடிகை கன்னம் ஒப்பீடு: அமைச்சர் மன்னிப்பு கேட்டும் அடங்காத சர்ச்சை
ஹேமமாலினி, கேத்ரீனா கைஃப்

சாலையின் சிறப்பை விளக்குவதற்காக, அதை நடிகை ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும், அங்கே சர்ச்சை தொடர்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். இவர், தனது தொகுதியில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தை விளக்குகிறேன் என்று சர்ச்சையில் சிக்கினார். ”எனது தொகுதிக்கு வந்து நான் மேற்கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளைப் பாருங்கள். இங்குள்ள சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்களைப் போல இல்லையென்றால் நான் ராஜினாமா செய்கிறேன்” என்று, குலாப்ராவ் பாட்டீல் சவால்விட்ட வீடியோ நேற்று(டிச.20) வைரலானது.

சிவசேனா - பாஜக இடையிலான அரசியல் போர் நாடறிந்தது. அம்பானி குடும்பத்துக்கான மிரட்டல், ஷாருக்கான் மகன் கைது என அப்போதைய நிலவரம் எதுவானாலும், அது சிவசேனா - பாஜக கட்சியினர் தங்களுக்கு இடையிலான பஞ்சாயத்தாக மாற்றி, மோதலில் குதிப்பார்கள். அந்த வகையில் நடிகை கன்னம் ஒப்பீட்டு விவகாரமும் சர்ச்சையானது.

நடிகை ஹேமமாலினி பாஜகவைச் சேர்ந்தவர். 10 வருடங்களுக்கு முன்னர் அக்கட்சியில் இணைந்தவர். மாநிலங்களவை எம்பியாகவும் தொடர்ந்து 2014 உபி மதுரா மக்களவை எம்பியாகவும் தேர்வானவர். தங்கள் கட்சியின் எம்பியை ஒப்பிட்ட விமர்சனம் என்றதாலும் பாஜகவினர் எதிர்ப்பு அதிகமானது. பாஜக மட்டுமன்றி மாநில மகளிர் ஆணைமும் கடுமையாக எதிர்வினையாற்றியது.

எதிர்ப்புகள் அதிகரித்ததை அடுத்து சிவசேனா அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், பகிரங்க மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார். “நல்ல சாலைகளை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கம். ஆனால் எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எனது பேச்சு எவரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மன்னிப்பு கேட்கக் கோரியதுடன் மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் அமைதியானது. ஆனால் கண்ணியமற்ற இழிவான கருத்துகளை, மாநில அமைச்சராக இருப்பவரே தெரிவித்திருப்பதை அப்படியே விட முடியாது என பாஜக கொதிக்கிறது. பெண்களை இழிவுபடுத்தியதாக குலாப்ராவ் மீது வழக்குப் பதிவு செய்யவும், சட்ட நடவடிக்கைகளை தொடரவும் இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

வடமாநில அரசியல்வாதிகள் இப்படி நடிகையின் கன்னங்களை சாலைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது புதிதல்ல. ஹேமமாலினியின் தீவிர ரசிகரான லாலுபிரசாத் யாதவ், இவர்களுக்கெல்லாம் முன்னோடி. பீகாரின் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களோடு ஒப்பிட்டுப் பலமுறை பேசியிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அமைச்சரான பி.சி.சர்மா “ஹேமமாலினியின் கன்னங்கள் போல சாலைகள் அழகு பெற இருக்கின்றன” என்று வழிந்தார்.

கடந்த மாதம் ராஜஸ்தானின் காங்கிரஸ் அமைச்சரான ராஜேந்திர சிங் குத்தா, கூட்டமொன்றில், “ஹேமமாலினியின் கன்னங்கள் போல சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்” என்றார். கூட்டத்திலிருந்த இளைஞர்கள் கேத்ரீனா கைஃப் பெயரை முன்மொழிய, அரைமனதாய் “சரி, கேத்ரீனா கன்னம் போலவும் சாலைகள் அமையட்டும்” என்றார். இந்த வரிசையில் தற்போது சிவசேனா அமைச்சரும் சிக்கி இருக்கிறார்.

சிவசேனா அமைச்சர் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை ஹேமமாலினி, “சாமானியர்கள் சிலர் இதுபோன்று பேசுவதைச் சாதாரணமாக கடந்து விடலாம். ஆனால் பொறுப்புள்ள அரசியல்வாதிகள், அமைச்சர்கள் பொதுவெளியில் இப்படிப் பேசுவது சரியல்ல” என்று ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.