நடிகர்களே, நீங்களும் சிரஞ்சீவியைப் பின்பற்றுங்கள்: தமிழிசை பரபரப்பு ட்விட்

நடிகர்களே, நீங்களும் சிரஞ்சீவியைப் பின்பற்றுங்கள்:  தமிழிசை பரபரப்பு ட்விட்

சகோதரர் சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் 'மெகா ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. அவர் இன்று தனது 67-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தன் பிறந்த நாளையொட்டி தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று தனி மருத்துவமனை ஒன்றைக் கட்டுவதாக அறிவித்துள்ளார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இந்த மருத்துவமனையைக் கட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தனது பிறந்த நாளில் முதல் இந்த மருத்துவமனை செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

ஹைதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கு, தெலுங்கு கிரிக்கெட் சங்கம் 20 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மருத்துவமனையைக் கட்ட இசைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி தருவதாக இசையமைப்பாளர் தமன் உறுதியளித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் அறிவிப்புக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " நடிகர் சிரஞ்சீவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப் போவதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் துறையில் ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in