நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்கத்தினரை களமிறக்கினார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்தி இந்து

தமிழகத்தில் நடந்து முடிந்த‌ ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டனர். இதில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றனர். ருசிகண்ட பூனையாக வர இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி தரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் படம், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி போன்றவற்றை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தேமுதிக, அமமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in