`ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்து, ஏது இந்தியா'-வெற்றிமாறனுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய கருணாஸ்!

`ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்து, ஏது இந்தியா'-வெற்றிமாறனுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய கருணாஸ்!

‘எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதையெல்லாம் மாற்ற முற்படுகிறார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்’ என்ற வெற்றிமாறன் பேச்சுக்கு கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ‘கலையை இன்று நாம் சரியாகக் கையாள வேண்டும். இதனைக் கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்’ என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம். பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது. அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் எனப் பல மதங்கள் இருந்தன. ராஜராஜன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு. ஆனால் ராஜராஜ சோழனை, ராஜேந்திர சோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது.

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும், அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதைத் தனதாக்கிக் கொள்ளும். அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழனை இந்து என்று மாற்ற நினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையைக் குதிரையாகத் திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள்.

வள்ளுவப் பெருந்தகைக்குக் காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம், எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதையெல்லாம் மாற்ற முற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்.  அந்த எச்சரிக்கையைத் தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. தமிழர் அடையாளங்களைப் பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்" எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in