முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் பாக்யராஜ் திடீர் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் பாக்யராஜ் திடீர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக வெற்றி பெற்ற நடிகர் பாக்யராஜ் முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக உள்ள கே.பாக்யராஜ் மீண்டும் தலைவராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிட்டார். பாக்யராஜ் அணியில் துணைத் தலைவராக கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார்‌ ஆகியோர் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, பாபுகணேஷ், அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், ஹேமமாலினி, ஜெயப்பிரகாஷ், பட்டுகோட்டை பிரபாகர், ராஜா, ராஜா கார்த்திக், ராஜேஷ்வர், சேகர், வேல்முருகன், பா.விஜய் ஆகியோர் போட்டியிட்டனர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான வசந்தம் எழுத்தாளர்கள் அணியில் துணைத் தலைவராக மனோபாலா, ரவிமரியா போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோர் போட்டியிட்டனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மதுரை தங்கம், பிரபாகர், ரங்கநாதன், சண்முகசுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, யுரேகா, பேரரசு, பொன்ராம், ராதாரவி, சாய்ரமணி, சாந்தகுமார், சரண், ஷரவணன் சுப்பையா, சினேகன், சிங்கம்புலி, ஏ,வெங்கடேஷ், விவேகா ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 570 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், வாக்களிக்க 490க்கும் மேலானவர்களுக்கு வாக்களிக்க தகுதியிருந்தது. தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாலர் உட்பட 21 பதவிகளுக்கான தேர்தல் வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதில் 192 வாக்குகள் பெற்று இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், தலைவர் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை சந்திக்காத நிலையில், அதிமுகவை சேர்ந்த நடிகர் பாக்யராஜ், முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்து வாழ்த்து பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in