தமிழக ஆளுநரின் செயல்பாடு உரிய நடவடிக்கையா? அரசியலா?

ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழக அரசியல் களத்தில் தற்போது சூடுபறக்கும் விவாதம், தமிழக ஆளுநருக்கும், திமுகவிற்கும் நடக்கும் உச்சக்கட்ட மோதல் தான். பெட்ரோல் -டீசல் விலை உயர்விற்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் மக்களவையில் குரல் எழுப்புக் கொண்டிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததில் இருந்து பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். 7 பேர் விடுதலை, நீட் தேர்வில் இருந்து விலக்கு, தமிழ்நாடு கூட்டுறவு சங்க மசோதா என பலவற்றை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்பதைத் தாண்டி, முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சந்தித்து வலியுறுத்திய பின்னும் தன்னிலையில் ஆளுநர் மாறவில்லை என்ற கோபம் தான், அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திமுகவை உந்தித் தள்ளியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார். அதில், "ஆளுநர் ரவி தமது பொறுப்புகளையும், கடமையையும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின் படி ஆற்றாமல் ஜனநாயக முறைகளை முடக்கி வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும், மிக முக்கிய மூன்று மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, மாநிலங்களவையில் தனி நபர் தீர்மானத்தை திமுக எம்.பி வில்சன் தாக்கல் செய்துள்ளார். இப்படித் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு நியமித்த ஆளுநர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியலில் நீண்ட காலமாக உள்ளது. ஆனால், தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு அரசியல் சார்ந்து உள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் பேசிய போது, “ அரசியலமைப்பு விதி 168-ல் மாநில பேரவையின் ஒருங்கிணைந்த அங்கம்தான் ஆளுநர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களின்படி பணமசோதா நீங்கலாக, வேறு எந்த மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அதை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைப்பார். எனவே, இப்பிரச்சினையை திமுக அரசியலாக்கப் பார்க்கிறது” என்றனர்.

தமிழன் பிரசன்னா.
தமிழன் பிரசன்னா.

இதுகுறித்து திமுக மாநில இணை செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், “ மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மூலம் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அதை ஆளுநர் ஏற்கலாம். அல்லது அதைத் திருப்பி அனுப்பலாம். அல்லது திருத்தம் கோரலாம். விரும்பினால் குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். இது தான் ஆளுநருக்கு வழங்கப்பட்ட கடமை. ஒரு முறை மசோதாவை ஆளுநர் நிராகரிக்கிறார் என்றால், மறுமுறை அதைத் திருத்தியோ, மாற்றியோ அனுப்புங்கள் என்று அவரே வேண்டுகோள் வைக்கலாம். அதனால் தான், நீட் தேர்வு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் கிடப்பில் போடுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை தான் பெரிது. சட்டப்பேரவை உறுப்பினர்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சி தான் பெரிது. ஆளுநர் பெரிதல்ல. அவர் ஒரு அங்கம் தான். அந்த அங்கத்தால் ஆட்சியை மீறி செயல்பட முடியாது. அவர் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ” ஆளுநரின் நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது தான். அந்த ஆர்எஸ்எஸ் அரசியலை அவர் தமிழகத்தில் காட்ட நினைத்தால், அவருக்குப் பொறுப்பாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in