விஜயபாஸ்கரின் குற்றச்சாட்டு உண்மை தானா?

எம் ஆர் விஜயபாஸ்கர்
எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் சிலவற்றில் சாலை போடாமலே பணம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசு சார்பில் தகுந்த விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இது குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குற்றச்சாட்டுகள் உண்மைதானா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை உட்பட நான்கு இடங்களில் சாலைகள் போடப்படாமலே திமுக ஒப்பந்ததாரரான எம்.சி.சங்கர்ஆனந்தின் 'எம்.சி.சங்கர்ஆனந்த் இன்ப்ரா, கரூர்' என்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் துணையுடன் பணம் வழங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 5-ம் தேதி கரூர் அலுவலரிடம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்ட பகுதிகளில் தடயங்களை அழிக்கும் வகையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அதிமுகவினர் கடந்த ஆறாம் தேதி புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி தலைமை செயலாளரிடமும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற திமுக ஒப்பந்ததாரரான எம்.சி.சங்கர்ஆனந்தின் லாரியை கோடங்கிபட்டி பகுதியில் வழிமறித்த சிலர் அதற்குத் தீ வைத்தனர். லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தாக்கவும் செய்தனர். இதை அதிமுகவினர் செய்தனர் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

சங்கர்ஆனந்த் நிறுவன ஊழியர் அளித்த புகாரின்பேரில் லாரிக்கு தீ வைத்த சம்பவத்தில் அதிமுக மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் தானேஷ் என்ற என்.முத்துகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றியச்செயலாளர்கள் கமலக்கண்ணன், மதுசூதன், கரூர் மத்திய மாநகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்ட சிலர் மீது தாந்தோணிமலை போலீஸார் நேற்று முன்தினம் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 12-ம் தேதி) நெடுஞ்சாலை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு வரும் நிலையில், நேற்று இரவே கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன்சிங், கணக்காளர் பெரியசாமி ஆகிய 4 பேரை மாநில நெடுஞ்சாலைத் துறை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறையில் அதிரடி நடவடிக்கையாக 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவரின் இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்று கரூர் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in