
தேசியக் கொடியை கொடிக்கம்பம் தவிர்த்து பிற இடங்களில் ஏற்றி அவமரியாதை செய்பவர்களையும், அது இசைக்கப்படும் போது மரியாதை தராமல் இருப்பவர்களையும் பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டி மேட்டில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதவி காவல் ஆய்வாளர் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்காமல் அமர்ந்திருந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததும், இது போன்று பிற மாவட்டங்களில் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவமரியாதை செய்ததாக வெளிவரும் செய்திகளும் மிகுந்த வேதனையளிக்கிறது.
மேலும், மழைநீர் வடிக்குழாயில் தேசியக்கொடி ஏற்றுவது என்பது பெருத்த அவமானம் என்பது கூட அந்தப்பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் தெரியவில்லையா அல்லது உணரவில்லையா அல்லது அவர்களுக்கு தேசப்பற்று இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு ஒரு கம்பம் அமைப்பதற்கு கூட வழியில்லாத நிலை வேதனையளிக்கிறது.
குடியரசு தினம், சுதந்திர தினம், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி, அரசு விழாக்கள் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் நாட்டுப்பண் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது, தாய்நாட்டு பாடலுக்கு உணர்வுப்பூர்வமாக மக்கள் மதிப்பளித்து மரியாதை செலுத்த வேண்டியது அவசியம். தேசியக்கொடியை அதற்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மட்டுமே ஏற்றுவதும் அவசியம். தாய்நாட்டின் பெருமையை எடுத்துரைத்து பாடல் இசைக்கப்படும்போது, எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறுபவர்கள் யாராக இருந்தாலும், தேசியக் கொடியைக் கொடிக்கம்பம் தவிர்த்து பிற இடங்களில் ஏற்றி அவமரியாதை செய்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் ”எனக் கூறப்பட்டுள்ளது.