கட்சிக்குள் அதிரடி மாற்றம்: மாயாவதி சகோதரர் மகனுக்கு முக்கியப் பொறுப்பு

கட்சிக்குள் அதிரடி மாற்றம்: மாயாவதி சகோதரர் மகனுக்கு முக்கியப் பொறுப்பு

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் அக்கட்சித் தலைவர் மாயாவதி. தன் சகோதரர் மகனை அரசியல் வாரிசாக்கி, கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கியுள்ளார்.

உபியில் நான்கு முறை முதல்வர் பதவி வகித்த மாயாவதிக்கு நடந்து முடிந்த 403 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி கிடைத்துள்ளது. கடந்த தேர்தல்களில் ஓரிரு இடங்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த எதுவும் கிடைக்கவில்லை. உத்தராகண்டில் 2 தொகுதிகள் கிடைத்தன. இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாயாவதி நேற்று முன்தினம் லக்னோவில் கட்சியின் நிர்வாக்குழுவை கூட்டி ஆலோசனை செய்தார். கூட்டத்தில், உபி சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த 402 வேட்பாளர்களையும் மாயாவதி அழைத்திருந்தார். அவர்களுடன், 2024 மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக உபியில் வரவிருக்கும் இரண்டு மக்களவை இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாநிலம் மற்றும் மாவட்டத் தலைவர்களை தவிர்த்து இதர அனைத்து மட்ட பதவிகள் மற்றும் நிர்வாகக்குழுக்களை கலைத்துள்ளார். மாநில தலைவர் பீம் ராஜ்பர் தலைமையில் கட்சியை வலுப்படுத்த முன்னாள் எம்.பி முன்காத் அலி, ஆஸம்கரின் முன்னாள் மேல்சபை உறுப்பினர் விஜய் பிரதாப் மற்றும் புலந்த்ஷெஹரின் ராஜ்குமார் கவுதம் ஆகியோரை அமைப்பாளர்களாக நியமித்துள்ளார். இவர்கள் உபி முழுவதிலும் பயணம் செய்து பீம் ராஜ்பரிடம் அறிக்கை அளிப்பார்கள். இதன் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு கட்சி மாற்றி அமைக்கப்படும்.

இத்துடன், தேசிய அளவிலும் ஒரு அமைப்பாளராக தனது சகோதரி மகனான ஆகாஷ் ஆனந்தை அமர்த்தியுள்ளார் மாயாவதி. இது, மாயாவதிக்கு அடுத்த நிலையிலானப் பதவியாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், தனது அரசியல் வாரிசையும் மாயாவதி களம் இறக்கியிருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவர், பஞ்சாப், உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தவர்.

ஆகாஷ் ஆனந்த், பல வருடங்களாக மாயாவதிக்கு உதவியாக மேடைகளில் பின்னால் நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். சாதாரண உறுப்பினராக பிஎஸ்பியில் இருந்தவருக்கு நேரடியாக இந்த முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேடைகளில் ஆகாஷை கண்டு ஒருமுறை அவர் மீது கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த மாயாவதி, தனக்கு வாரிசாக எவரும் கட்சியில் கிடையாது என உறுதி அளித்திருந்தார். எனினும், இப்போது ஆகாஷுக்கு முக்கியப் பதவி அளித்திருப்பதன் தாக்கம் பிஎஸ்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஆஸம்கர் மக்களவை தொகுதி வேட்பாளராக குட்டு ஜமாலி என்பவரை மாயாவதி அறிவித்துள்ளார். இந்த ஜமாலி, 2017-ல் ஆஸம்கரின் முபாரக்பூர் எம்எல்ஏவாகி உபி சட்டப்பேரவையின் கட்சித் தலைவராக இருந்தார். 2022 தேர்தலுக்கு சற்று முன்னதாக ஹைதராபாத் எம்.பியான அசதுத்தீன், உவைசியின் கட்சியில் போட்டியிட பிஎஸ்பியிலிருந்து விலகினார். தனது தோல்விக்கு பின் மீண்டும் கட்சிக்கு திரும்பியவர் பிஎஸ்பியின் வேட்பாளராகி உள்ளார். உவைசியின் கட்சியின் போட்டியிட்ட 103 வேட்பாளர்களில் தனது வைப்புத்தொகையை தக்கவைத்த ஒரே வேட்பாளர் இந்த குட்டு ஜமாலி ஆவார்.

உபியில் இதர கட்சிகள் ஆதரவுடன் மாயாவதி மூன்றுமுறை கூட்டணி முதல்வராக இருந்தார். இவருக்கு சமாஜ்வாதி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்திருந்தனர். இவர்கள் அனைவருடனும் மாயாவதிக்கு மோதல் ஏற்பட்டு அவரால் ஆட்சியை முழுமைப்படுத்த முடியவில்லை. 2007-ல் முதன்முறையாக பிஎஸ்பிக்கு 206 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. 2012-ல் 80 தொகுதிகளிலும், 2017-ல் 19 தொகுதிகளிலும் பிஎஸ்பி வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு குறையத் துவங்கிய வெற்றிகள் தற்போது முடிந்த தேர்தலில் ஒன்றாகிவிட்டது.

Related Stories

No stories found.