ஆளுநர் மீது நடவடிக்கையா?: முதல்வர் ஸ்டாலின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்!

ஆளுநர் மீது நடவடிக்கையா?: முதல்வர் ஸ்டாலின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்!

ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் முர்மு.

இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார் ஆளுநர் ரவி.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர். அந்தக் கடிதத்தில், அரசியல் சாசன பகுதிகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவர் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அதுபற்றி பார்ப்பதாக தி.மு.க. குழுவினரிடம் தெரிவித்தார். இந்த நிலையில், ஆளுநர் உரை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அனுப்பி வைத்துள்ளார். முதல்வரின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது."கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in