காத்திருக்கும் அமில சோதனை: கடந்து நிற்பாரா உதயநிதி?

காத்திருக்கும் அமில சோதனை: கடந்து நிற்பாரா உதயநிதி?
-

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதில் எவருக்கும் ஆச்சரியம் இல்லை. ஆனால், கட்சியின் சீனியர்கள் - உணர்வாளர்கள் முதல் ஆட்சியின் நிர்வாக நெருக்கடிகள் வரை; வீட்டுக்குள் மாப்பிள்ளை சார் முதல் வெளியே விஜய் வரை... எவ்வாறு உதயநிதி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் பலதரப்பிலும் புருவமுயர்த்த செய்திருக்கிறது.

பட்டத்து இளவரசர், அனுபவமற்றவர் என்றெல்லாம் அரசியல் வெளியில் விமர்சனத்துக்கு ஆளாகும் உதயநிதியை, அவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களே புடம்போடவும் காத்திருக்கின்றன.

-

ஏனிந்த அவசரம்?

அமைச்சரவையில் உதயநிதி என்ற தகவல் வெளியானதுமே டிடிவி தினகரன் எழுப்பிய, ’ஏனிந்த அவசரம்..?’ என்ற கேள்வி அரசியலின் பல மூலைகளிலும் எதிரொலித்தது. உதயநிதி அமைச்சராவதும், அதற்கடுத்த நிலைக்கு முன்னேறுவதும் தவிர்க்கமுடியாத அவசியம் என்பவர்கள்கூட, அவசரம் ஏன் என்கிறார்கள். உதயநிதிக்கு அமைச்சர் பதவி என துதி பாடியவர்கள்கூட பெரிதாய் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதற்கு அமைச்சரவை நியமனத்தின் முதல் சுற்றிலேயே பொறுப்பு வழங்கியிருந்தால் இந்நேரம் அடங்கிப் போயிருக்கும். எம்எல்ஏ-வாக களப்பணிகள், இளைஞரணியில் செயலாக்கம் என ஆட்சியிலும் கட்சியிலும் உதயநிதி தன்னை நிரூபித்த பின்னர், 2024 மக்களவைத் தேர்தல் வாக்கிலே அவருக்கான அமைச்சரவை பரிசு காத்திருந்தது. இந்த இரு தருணங்களுக்கும் மத்தியில், வெளியில் புலப்படாத அவசரம் வீட்டுக்குள்ளிருந்தே வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கிச்சன் கேபினெட்டின் திட்டம் என்ன?

ஸ்டாலினை முன்னிறுத்துவதில் கலைஞருக்கு இருந்த தயக்கம், உதயநிதி வகையிலும் ஸ்டாலினை அலைபாயச் செய்தது. ஸ்டாலினுக்கு இணக்கமான கட்சி சீனியர்களும் ’சிலகாலம் உதயநிதி அனுபவம் பயில்வதே நல்லது’ என்றனர். உதயநிதிக்கும் தனிப்பட்ட வகையில் சினிமாவில் தடம் பதிப்பதிலேயே ஈடுபாடு அதிகம் இருந்தது. நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பு, விநியோகம் என ஆழம் பாவ அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இணையாக திரைத்துறையில் இயங்கும் அவரது சகதர்மிணிக்கும் இதுவே விருப்பம். பதவிப்பிரமாணம் இன்றியே சகல அதிகாரங்களுடன் ’ஆல்ரவுண்டர் அமைச்சரா’க உலவிய உதயநிதிக்கு தனியாக ஒரு துறை தேவைப்படவும் இல்லை.

ஆனால், கிச்சன் கேபினட்டின் அழுத்தம் வேறாக இருந்தது. ஸ்டாலினின் உடல்நிலை, ஓய்வு குறித்தான அக்கறையும் அதில் அடங்கும். அதற்கு அப்பால் வீட்டுக்குள்ளேயே வலுக்கும் அரசியல் போட்டியையும், தொலைநோக்குப் பார்வையில் கிச்சன் கேபினட் மோப்பமிட்டது. உதயநிதியின் ஆகிருதியை மீறியதாக சபரீசன் வளர்வது, பிற்காலத்தில் குடும்பம், கட்சி, ஆட்சி என அனைத்திலும் குழப்பம் உண்டாக்கலாம் என்பதான கலக்கம், ஸ்டாலினுக்கும் தொற்றியது. மாப்பிள்ளையின் மீது அவர்களுக்கு ஐயமில்லை. ஆனால் அவரைச் சுற்றும் நிழல் மையங்கள் குறித்து ஸ்டாலின் தம்பதிக்கு கவலை பிறந்தது. சகோதர யுத்தத்தின் வடுவே இன்னும் ஆறாத கலைஞர் குடும்பத்தில், புதிய சிக்கல்களை அவை எழவே வாய்ப்பிலாது போக முடிவு செய்தனர். குடும்பத்தின் இந்த முடிவுக்கு, அடுத்தபடியாக ’குடும்ப கட்சிக்கு’ எதிரான கட்சியின் திடீர் கிளர்ச்சியாளர்கள் குறித்த தகவலும் காரணமானது.

திமுகவின் ஏக்நாத் ஷிண்டே யார்?

மராட்டிய மண்ணில் சிவசேனா கட்சியை நிர்மாணித்த பாலாசாகிப் தாக்கரேவின் வழி வந்த தொண்டர்கள் அவர் மகன் உத்தவ் தாக்கரேவை எளிதாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரே அரசியலுக்கு வந்ததும், அந்த ஆஸ்தான தொண்டர்கள் புகைய ஆரம்பித்தனர். இதில் முளைத்த விரிசலை மேலும் பெரிதாக்கிய பாஜக, தனது பழகிய பாணியில் சிவசேனாவை உடைத்து, அப்படி பிரிந்தவர்களுடன் இணைந்து இப்போது மகாராஷ்டிராவை ஆண்டு வருகிறது. சீனியர் தாக்கரேயை தொழுதவரும், உத்தவ் தாக்கரேயின் வலது கரமாக இருந்தவருமான ஏக்நாத் ஷிண்டே இந்த பிரிவுக்கு தலைமையேற்றார். ஷிண்டேவை முதல்வர் நாற்காலியில் பொம்மையாக அமர்த்திவிட்டு, துணை முதல்வர் ஃபட்நாவிஸ் தலைமையில் அங்கே பாஜக இப்போது ஆண்டு வருகிறது.

மராட்டிய அரசியலில் பூகம்பம் நிகழ்ந்தது முதலே, திமுகவின் ஏக் நாத் ஷிண்டே யார் என்ற கேள்வி தமிழக அரசியலில் மையம் கொண்டது. சிலர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சுட்டிக்காட்டினார்கள். வேறு சிலர் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் இருந்த சீனியர்கள் சிலரை உச்சரித்தனர். ஏதாயினும் மராட்டிய அரசியல் மோசடி திமுகவில் தலைகாட்டக் கூடாது என்பதில் கட்சித் தலைமை தீவிரமானது. எனவே தள்ளிப்போடாது இளவரசருக்கு பட்டாபிஷேகம் நடத்த முடிவானது. ஆனால், அந்த ஏற்பாட்டிலும் புதிய குளறுபடிகள் அதன் பின்னர் தலைகாட்டின.

பெயரளவில் உதயநிதியை அமைச்சராக்க கூவினாலும், உளமார விரும்பாதவர்களே திமுகவில் அதிகம். கலைஞர் மகனாக ஸ்டாலினை ஏற்றுக்கொண்டதற்கும், ஸ்டாலின் மகனாக உதயநிதியை விரும்பத்தலைபடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் தங்கள் வாரிசுகளுக்கு உரிய வாய்ப்புகளை கண்டடைந்த சில சீனியர் அமைச்சர்கள் ஒருவாறாக திருப்தியுற்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையிலான அமைச்சர்களும், புதிய அமைச்சரவை புரோட்டாக்கால் பார்த்ததும் அடிபட்டுப் போயிருக்கிறார்கள்.

புரோட்டாக்கால் புயல்

முதல்வரின் கையெட்டும் இடத்தில் நிதியமைச்சர் இருப்பதே தமிழகத்தின் வழக்கம். மாறாக 27-வது இடத்தில் நிறுத்தியதில் நிதியமைச்சரான பிடிஆரை வெகுவாய் சீண்டியிருக்கிறார்கள். உதயநிதியை வழிமொழிந்த வகையில் திமுகவின் தனி அடையாளமான சுய மரியாதை சற்று அடிபட்டு போயிருக்கலாம். ஆனால், முற்றிலுமாக தேய்ந்து இன்னொரு அதிமுகவாக மாறிவிடாது. எக்காலத்திலும் திமுகவின் பலம் அதன் உணர்வாளர்கள்தான். இவர்கள் உதயநிதியை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே யதார்த்தம். கட்சியில் இப்படி புகையும் உரசல்களே பின்னாளில் பெரும் பூசலாகவும் வெடிக்கக்கூடும். இதுவே பாஜகவின் பரமபத ஆட்டத்துக்கு பகடையாகவும் சிலரை உருட்டக்கூடும்.

உதய் - விஜய் சதாய்ப்பு என்னாகும்?

உதய்யை வட்டமடிக்கும் வாரிசு சர்ச்சைக்கு இணையாக, விஜய்யின் ’வாரிசு’ திரைப்படத்தை முன்வைத்தும் ஒரு சர்ச்சை உதயநிதியை வம்பிழுக்கிறது. அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தை தமிழகம் முழுக்க விநியோகம் செய்யும் உதயநிதியின் ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’, வாரிசு திரைப்படத்துக்கான சென்னை, செங்கை, கோவை வட்டார விநியோகத்தையும் பார்க்கிறது. ஆனபோதும் துணிவுக்கு ஒதுக்கிய அளவுக்கு வாரிசுக்கு திரைகள் ஒதுக்கப்படாது குறித்து அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளிப்படையாக புலம்பியிருக்கிறார். ’அஜித்தைவிட விஜய் பெரிய நடிகர்; தமிழகத்தில் விஜய்தான் நெம்பர் 1’ என்று ஹைதராபாத்தில் தில் ராஜூ தில்லாக சீறியது, இங்கே தமிழகத்தில் அஜித் தரப்பைவிட உதயநிதி வட்டாரத்தையே வெகுவாய் சீண்டியது.

உள்ளாட்சி தேர்தல் வாயிலாக விஜய் மக்கள் இயக்கம் அடியெடுக்கும் அரசியல் நகர்வுகள், சத்தமின்றி ரசிகர்களை அரசியல் பாதைக்கு கொம்பு சீவும் விஜயின் வியூகங்கள், அதில் குறுக்குச்சால் ஓட்டியது பெற்ற தந்தையே ஆனாலும் தூக்கியடிக்கும் விஜய்யின் வேகம் ஆகியவை உதயநிதிக்கான அரசியல் உத்திகள் வகுப்போரை கவனிக்க வைத்திருக்கின்றன. திரையுலகின் உச்சத்திலிருக்கும் விஜய் இப்போதைக்கு நேரடி அரசியலில் இறங்க வாய்ப்பில்லை என்றபோதும், அரசியல் கனவுடன் ரசிகர் மன்றத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் விஜயின் நகர்வுகளை அவர்கள் உன்னிப்பாக பின்தொடர்கிறார்கள்.

ஸ்டாலின் போன்ற அனுபவஸ்தர்களை எதிர்த்து அரசியலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்பதை விஜயும் உணர்ந்தே இருக்கிறார். எனவே உதயநிதியின் காலத்தில் களம் காணவே அவர் திட்டமிட்டிருக்கிறார். இப்போதைக்கு உதயநிதிக்கு விஜய் ஒரு பொருட்டில்லை. ஆனால், சீண்டினால் மட்டுமே சினிமா ரசிகர்கள் அரசியல் தொண்டர்களாக மாறுவார்கள் என்பதால், அதற்கான வாய்ப்புக்கு விஜய் வட்டாரம் காத்திருப்பதை உதய் தரப்பும் உணர்ந்தே உஷாராக இருக்கிறது.

தாக்குப்பிடிப்பாரா பட்டத்து இளவரசர்?

உதயநிதிக்கு அளிக்கப்பட்ட அமைச்சரவை பொறுப்புகளில் ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை’விட ’சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை’யில் சவால்கள் அதிகம் காத்திருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியாக வேண்டிய இந்த துறை, முன்னதாக முதல்வர் வசமிருந்ததை இதர அமைச்சர்கள் எளிதில் எதிர்கொண்டனர். இனி இந்த சீனியர்களின் பணியில் உதயநிதி தலையிடுவதோ அல்லது ஃபீட்பேக் கேட்பதோ ஒரு கட்டத்தில் அதிருப்திக்கும் ஆளாக்க செய்யலாம்.

தேர்தல் பிரச்சாரத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறை என்பதாலும், வரும் மக்களவை தேர்தலுக்குள் குறிப்பிட்ட அடைவை முடித்தாக வேண்டிய நெருக்கடியும் உதயநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை உதயநிதி எவ்வாறு கையாளப் போகிறார் என்பதை பொறுத்தே அவரது பக்குவமும் வெளிப்பட வாய்ப்பாகும்.

உதயநிதி அமைச்சராக காத்திருந்தார்போல இனி அரசியல் தாக்குதல்கள் அவரையே அதிகம் குறிவைக்கும். இதர துறைகளைவிட உதயநிதியின் கட்டுப்பாட்டிலுள்ள துறையின் சிறு சறுக்கலும் பெரிதாக பேசப்படும். குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும். ஸ்டாலினைவிட இனி உதயநிதியே எதிர்க்கட்சிகளின் கல்லடிக்கு அதிகம் ஆளாவார். வெளித்தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க உதயநிதியின் சுபாவம், பக்குவம், அரசியல் அனுபவம் ஆகியவை இடம் கொடுக்குமா, கட்சியின் உள்விவகாரங்களில் உதயநிதி நேரடியாக அதிரடி காட்டினால் கட்சி புள்ளிகள் இசைவார்களா என்பதெல்லாம் கேள்வியே.

இவற்றையெல்லாம் அமில சோதனையாக கடந்து வந்தால், ஸ்டாலினை ஏற்றுக்கொண்டது போலவே உதயநிதியையும், கட்சியினர் மட்டுமன்றி மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். தமிழகத்துக்கு அடுத்த தலைமுறைக்கான ஒரு தலைவனும் கிடைத்திருப்பார். உதயநிதி என்ன செய்யப்போகிறார்..?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in