‘நாங்க இனி தேசியக் கட்சி’: குஜராத் தோல்விமுகத்திலும் ஆம் ஆத்மி உற்சாகம்

‘நாங்க இனி தேசியக் கட்சி’: குஜராத் தோல்விமுகத்திலும் ஆம் ஆத்மி உற்சாகம்

குஜராத் தேர்தல் முடிவுகளின் மத்தியில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பின்னே மூன்றாவது இடத்தை வகித்தாலும் ஆம் ஆத்மி கட்சி பெருமிதம் கொள்வதற்கு விஷயம் இருக்கிறது.

டிச.1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நிறைவுற்ற குஜராத் சட்டப் பேரவைக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாஜக - காங்கிரஸ் - ஆஆக என மும்முனைப் போட்டியை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரங்களில் அனல் பறந்தது. 27 ஆண்டுகளாக காவி கொடி பறக்கும் குஜராத்தில் இம்முறையும் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் பாஜகவினர் உறுதியாக உள்ளனர். வெற்றி நிச்சயம் என்ற போதும், இதுவரையில்லாத அறுதிப் பெரும்பான்மையை அடைவதே அவர்களின் லட்சியம். அடுத்த மக்களவை தேர்தலுக்கான அச்சாரமாக குஜராத்தின் வெற்றி அமைய வேண்டும் என்பதும் பாஜகவின் இலக்குகளில் அடங்கும்.

2017 சட்டப் பேரவை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று பாஜகவை மிரட்டிய காங்கிரஸ் கட்சி அவற்றை இந்த தேர்தலில் தக்கவைக்க தீர்மானம் கொண்டது. இந்த 2 கட்சிகளுக்கும் அப்பால் ஆம் ஆத்மி கட்சியும் அதகளம் செய்தது. காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உருவெடுக்க இலக்கு வைத்திருந்தது. ஆஆக அள்ளிவிட்ட இலவச வாக்குறுதிகள் பாஜகவை மிரளச் செய்தன.

ஆனால் இன்றைய வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்கள் காங்கிரஸ் மற்றும் ஆஆக கணக்குகளை திருத்தி எழுதி வருகின்றன. காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்தாலும் தனது முந்தைய தேர்தல் வெற்றியை தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸை பின்தள்ளுவோம் என்று இறுமாந்திருந்த ஆஆக மூன்றாம் இடத்தில் தத்தளிக்கிறது. இந்த இக்கட்டிலும், ஆம் ஆத்மி பெருமிதப்பட்ட விஷயமிருக்கிறது.

கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, ’நாங்கள் இனி தேசியக் கட்சி’ என பெருமித பிரகடனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர், ‘குஜராத் மக்களின் வாக்குகள் வாயிலாக ஆம் ஆத்மி கட்சி இன்றைய தினம் தேசியக் கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை சாத்தியமாக்கிய தேசத்துக்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.

2020-இல் டெல்லி, 2022-இல் பஞ்சாப் என சட்டப் பேரவை தேர்தல்களின் வெற்றி மூலம் 2 மாநிலங்களில் ஆட்சியமைத்திருக்கும் ஆஆக, அடுத்த கட்டமாக குஜராத்தை குறி வைத்தது. குறைந்தது 6% வாக்குகள் மற்றும் 2 இடங்களின் வெற்றி ஆகியவற்றை சாத்தியமாக்கினால், தேசியக் கட்சிக்கான பரிசீலனைக்குள் ஆஆக பிரவேசித்து விடும்.

இந்தியாவில் இன்றைய தேதியில் 8 தேசியக் கட்சிகள் இருந்தபோதும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அப்பால் இதர கட்சிகள் தேசிய அளவில் பெரிதாய் சோபிக்கவில்லை. தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறும்பட்சத்தில், பாஜக காங்கிரஸ் வரிசையில் அடுத்த இடத்துக்கு ஆம் ஆத்மி நெருங்கும் என்பது அக்கட்சியினரின் கணிப்பு. 2024 மக்களவை தேர்தலை நோக்கி திடமாக அடியெடுக்கும் ஆம் ஆத்மிக்கு இந்த அங்கீகாரங்கள் மைல்கல்லாகவும் மாறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in