
சென்னை அண்ணாசாலையில் விபத்தில் சிக்கியவரை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு 5-வது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. குறிப்பாக சாலை விபத்துகளால் மரணம் அதிகரிப்பதாக தெரிகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கி சென்று காயம் அடைந்தவரை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதல்வரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.