
இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை புதுக்கோட்டையில் தொடங்கிட வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசுக் கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிலேயே மொத்தம் 7 நிறுவனங்கள்தான் உள்ளன.
இந்திய அளவில் மதிப்பு மிக்க உயர் கல்வி நிறுவனமான அந்த நிறுவனத்தின் பிரிவு ஒன்றைப் புதுக்கோட்டையில் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிற புதுக்கோட்டையில் அத்தகைய உயரிய கல்வி நிறுவனங்கள் எதுவும் தற்போது வரை இல்லை.
சுதந்திர இந்தியாவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம்தான். ஆனால் இந்த 75 ஆண்டுகளில் மத்திய அரசு புதுக்கோட்டைக்கு எதையுமே செய்யவில்லை. எனவே, இந்நிறுவனத்தை புதுக்கோட்டையில் நிச்சயமாக அமைத்துத் தர வேண்டும்" என அப்துல்லா வேண்டுகோள் வைத்தார்.