ஆவின் விற்பனையைக் குறைக்கவே பால் விலை உயர்வு!

பால் உற்பத்தியாளர்கள் வெளியிடும் பகீர் தகவல்
அமைச்சர் நாசர் ஆய்வு...
அமைச்சர் நாசர் ஆய்வு...

மின்கட்டண உயர்வு கொடுத்த ‘ஷாக்’கிலிருந்தே இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஆவின் பால் விலையையும் உயர்த்தியுள்ளது தமிழக அரசு. சாமானிய மக்களுக்கு இதனால் பாதிப்பில்லை என்று அரசு சொன்னாலும், இது நிச்சயம் சாதாரண மக்களுக்குத்தான் பாதிப்பு என்கின்றன எதிர்க்கட்சிகள்.

தீபாவளிக்கு ஆவினில் இனிப்பு விற்பனை அதிகரிப்பு என்ற தித்திப்புச் செய்தி செவிகளை விட்டு நீங்கும் முன்னரே, ஒரு கசப்பு செய்தியையும் மக்களுக்குக் கொடுத்தது தமிழக அரசு. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய கையோடு, ஆவினின் ஆரஞ்சு, சிவப்பு, பிரவுன் நிற பால் பாக்கெட்டுகளின் விலையையும் தடாலடியாக உயர்த்தியது. நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை அதிகரிக்கவில்லை என்பது ஆறுதலான செய்தி என்றாலும், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பாக்கெட்டுகளின் விலை உயர்வு நிச்சயம் பொதுமக்களை பாதிக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் பால் முகவர்களின் குரலாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் விதமாக, பால் விலை உயர்வால் இப்போது பல ஊர்களில் டீக்கடைகளில் டீ மற்றும் காபியின் விலையை உயர்த்திவிட்டனர்.

எவ்வளவு உயர்த்தப்பட்டது பால் விலை?

தமிழகத்தில் இப்போது சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட் ஆவின் பால், அட்டைதாரர்களுக்கு லிட்டர் 37 ரூபாய்க்கும், சில்லறை விலையாக ரூ.40-க்கும் கொடுக்கப்படுகிறது. நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாக்கெட் பால், அட்டைதாரர்களுக்கு 42 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 43 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு பாலின் விலையிலும் எந்த மாற்றமும் இப்போது செய்யப்படவில்லை. ஆனால், 6% கொழுப்புச் சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ’பிரீமியம்’ பாலின் சில்லறை விலை தற்போது லிட்டர் 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது, அட்டைதாரர்களுக்கு வழக்கமான 46 ரூபாய் விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதுபோல 6.5% கொழுப்புச் சத்து நிறைந்த சிவப்பு நிற ’டீமேட்’ பாலின் விலையானது லிட்டர் 60 ரூபாயிலிருந்து, ரூபாய் 76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பிரவுன் நிற ‘கோல்ட்’ பாலின் விலையானது லிட்டர் 47 ருபாயிலிருந்து 56 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெய், பால்பவுடர், பட்டர் போன்ற பால் பொருட்களின் விலை மார்ச் மாதமே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பாலின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

நாசர்
நாசர்

இந்த பால்விலை உயர்வுக்கு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது குறித்து விளக்கமளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், “பால் உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். இதன் காரணமாகவே, ஆரஞ்சு நிற பாக்கெட் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் அட்டைதாரர்களுக்கு பழைய விலைக்கே வழங்கப்படும். சில்லறை விற்பனை விலை மட்டுமே 60 ஆக உயர்ந்துள்ளது. ஆரஞ்சு நிற பாலை 11 லட்சம் பேர் வாங்குகிறார்கள். இதில் 40 சதவீதம் பேர் அட்டைதாரர்கள், 60 % பேர் சில்லறை விற்பனையில் வாங்குபவர்கள். தற்போது ஆவினில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பால், குஜராத், கர்நாடக மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே, இந்த பால் விலை உயர்வு சாமானிய மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது" என தெரிவித்துள்ளார்.

ஆவினில் நிர்வாக குளறுபடிகள்!

ஆவின் விலை உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, “ கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வு காரணமாக லிட்டருக்கு 15 ரூபாய் வரை பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை இப்போது லிட்டருக்கு வெறும் 3 ரூபாய் உயர்த்தி வழங்கியுள்ளனர்.

கொள்முதல் விலையை உயர்த்தும்போது பால்விலையையும் உயர்த்தவேண்டியது கட்டாயம் தான். 2014-ல் பால் கொள்முதல் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டபோது, 10 ருபாய் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. அதுபோல 2019-ல் 4 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி, 6 ரூபாய் விற்பனை விலையை உயர்த்தினார்கள். ஆனால் இப்போது, 3 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி 16 ரூபாய் விற்பனை விலையை அதிகரித்துள்ளனர். அதிலும் ஒரு பாலின் விலையை மட்டுமே உயர்த்தியுள்ளோம் என்பது கண் துடைப்பு நாடகம். ஏனென்றால் ஆவினில் ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் பாலில் 45 சதவீதம் ஆரஞ்சு நிற பால்தான் விற்பனையாகிறது.

மாதாந்திர அட்டைகளுக்கு விலை ஏற்றவில்லை என்கிறார்கள். ஆனால், சென்னையில் மட்டும்தான் அட்டைதாரர்கள் அதிகம், மற்ற ஊர்களில் மிகக் குறைவுதான். ஆவின் அட்டை போட ஒரு மாதம் முன்பே மொத்தமாக பணம் கட்ட வேண்டும். அன்றாடம் சம்பாதிக்கும் எளிய மக்களால் அட்டை வாங்க இயலாது. அவர்கள் சில்லறை விற்பனையில்தான் வாங்குகிறார்கள். எனவே, இந்த விலை உயர்வு எளிய மக்களையே அதிகம் பாதிக்கும்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

அரசின் உண்மையான நோக்கம் என்னவென்றால் ஆவினின் விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான். கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாதது, கொள்முதல் செய்த பாலுக்கான தொகையை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பது, கால்நடை தீவனங்களுக்கு சத்தமின்றி மானியத்தை நிறுத்தியது போன்ற பல்வேறு காரணங்களால் ஆவினுக்கான பால் வரத்து 10 லட்சம் லிட்டர் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இதனால் ஒவ்வொரு பால் பண்ணையிலும் நிறைகொழுப்பு பால் தயாரிப்பதற்கான ‘கிரீம்’ போதிய கையிருப்பு இல்லாமல் போனது. தற்போதைய தேவைக்கே குஜராத் மாநில கூட்டுறவு நிறுவனமான அமுல் உள்ளிட்ட அண்டை மாநில பால் நிறுவனங்களிடமிருந்து ‘பட்டர் ஆயில்’ அதிக விலைகொடுத்து வாங்கி நிறைகொழுப்பு பால் தயாரிக்கும் சூழல் உள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் இழப்பின் விளைவாகவே, ஆரஞ்சு பாலின் விலையை உயர்த்தி அதன் விற்பனையை குறைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “விலை உயர்வு காரணமாக ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற நிறைகொழுப்பு பாலின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. தனியாருக்கு சாதகமான இந்த நிலைப்பாடு ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் தரப்பின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. கொள்முதல் விலையை உயர்த்தி, விற்பனை விலையை உயர்த்தும்போது அனைத்து பாலின் விலையையும் உயர்த்த வேண்டும். ஆனால், ஒரு பாலின் விலையை மட்டும், அதுவும் சில்லறை விலையை மட்டும் உயர்த்துவது தவறான முன்னுதாரணம். இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் போலியான அட்டைகளை போட்டு அதிகளவில் முறைகேடுகள் நிச்சயமாக நடக்கும்.

நெய், பனீர், பட்டர், பால்பவுடர் உள்ளிட்ட் ஆவின் பால் பொருட்களின் விலையை மார்ச், ஜூன், செப்டம்பர் என இந்த ஆண்டில் மட்டும் 3 முறை உயர்த்தியுள்ளனர். இதன் மூலமாக ஆவினுக்கு கோடிக்கணக்கில் வருமானம் உயர்ந்துள்ளது. அப்படியிருக்கையில் தொடர்ந்து ஆவின் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொன்னால், அதற்கு ஆவினில் நடக்கும் ஊழலும், முறைகேடுகளும்தான் காரணம். அதனை முதலில் இந்த அரசு சரிசெய்யவேண்டும்.

தினமும் இரண்டு லட்சம் லிட்டர் பால் விற்கும் தனியார் நிறுவனங்களே லாபத்தில் இயங்கும்போது, 25 – 28 லட்சம் லிட்டர் பால் விற்கும் ஆவின் எப்படி நஷ்டத்தில் இயங்கும்? அதுவுமில்லாமல், தேவையற்ற செலவினங்களும் அதிகம் ஆவினில் உள்ளது. 17 ஒன்றியங்களாக இருந்த ஆவினை 25 ஒன்றியங்களாக அதிமுக ஆட்சியில் மாற்றினார்கள். இப்போது மேலும் 2 ஒன்றியங்கள் சேர்த்துள்ளனர். இதனால் நிர்வாகச் செலவு அதிகமாகிறது. தமிழகத்தை 5 மண்டலங்களாக மட்டும் பிரித்து நிர்வாகம் செய்தால் செலவு குறையும். பால் உற்பத்தியை, விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், தீபாவளி சமயத்தில் இனிப்பு விற்பனையில் ஆவின் இறங்குவதற்கான காரணம் என்ன?

ஆவின் இனிப்புகளின் அதிகமான விலை காரணமாக பல இனிப்புகள் விற்பனையாகாமல் வீணாகிக் கிடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை ஒன்றியத்தில் மட்டும் 2 ஆயிரம் டன் இனிப்பு கெட்டுப்போய் இன்னும் குடோனில் கிடக்கிறது. அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி சங்கீதா என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு இப்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார். இதுபோல ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளைச் சீர் செய்யாமல் மக்களின் தலையில் பால் விலை உயர்வு எனும் இடியைத் தூக்கி தமிழக அரசு போட்டுள்ளது” என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “ஆவின் பால் விலை உயர்வால் சாமானியர்களுக்கு பாதிப்பு இல்லை என்கிறார்கள். அப்படியானால் வணிகர்கள் பாலினை யாருக்கு கொடுக்கிறார்கள்; சாமானியர்களுக்குத்தானே. வணிகர்களுக்கான விலை உயர்வு சாமானியர்களின் தலைமீது தானே விழும். அட்டை வைத்திருக்காத ஏழை எளிய மக்களை இந்த விலை உயர்வு பாதிக்கத்தானே செய்யும். ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு பணம் உள்ளவர்களைத்தான் பாதிக்கும், சாமானியர்கள் அரசுப் பேருந்தில் சென்றுவிடுவார்கள் என திமுக அமைச்சர் கூறினார். அதுபோல மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டு அதுவும் சாமானியர்களைப் பாதிக்காது என்று சொன்னார்கள். இப்படி தொடர்ந்து திமுக ஆட்சி மக்களை வஞ்சித்து வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களை இவர்கள் ஒப்பிடுவது தவறு, குறிப்பாக, குஜராத்தில் அமுலின் விலை அதிகரிக்கவில்லை. அடுத்ததாக, அங்கே மதுவிற்பனையே கிடையாது. குஜராத்தை பின்பற்றி தமிழகத்திலும் மதுவிற்பனையை கைவிடுவார்களா? மக்களுக்கு நல்லது செய்வோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, மக்களை ஏமாற்றி மோசடி செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளது” என்றார்.

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் போது அது அனைத்துத் தரப்பினரையும் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும். எனவே, “இது சாமானிய மக்களைப் பாதிக்காது” என்று சால்சாப்புச் சொல்வதை விட்டுவிட்டு இனியாவது இதுபோன்ற விலை உயர்வுகளை அறிவிக்கும் போது ஆட்சியாளர்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படட்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in