ஆவின் அட்டையுடன் ரேஷன் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும்: ஆவின் நிர்வாகம் திடீர் உத்தரவு

ஆவின் அட்டையுடன் ரேஷன் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும்: ஆவின் நிர்வாகம் திடீர் உத்தரவு

ஆவின் அட்டையுடன் ரேஷன் கார்டையும் இணைப்பது கட்டாயம் என ஆவின் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது.

மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் கார்டை இணைக்கும் முறை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சமையல் எரிவாயு திட்டத்திற்கு ஆதாரை இணைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டு, மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்கும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனத் தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

தற்போது ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்புச் சத்து அடிப்படையில்  சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் எனத் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் பால் பாக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி ஆவின் ஆரஞ்சு பாலின் பாக்கெட் விலை சில்லறை விலையில் அறுபது ரூபாய்க்கும்,  சிவப்பு பாக்கெட் பால் 76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  

மாதாந்திர அட்டை தாரர்களுக்கு மட்டும் பால் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மாதாந்திர அட்டை மூலம் பெறப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வணிக ரீதியில் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் வந்த நிலையில், முறைகேடுகளைத் தடுக்க மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தொடங்கியுள்ளது. 27 மண்டலங்களில் இணையதளத்தின் மூலமாக இந்தப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in