முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தார் கேஜ்ரிவால்: சூடுபிடிக்கிறது குஜராத் தேர்தல் களம்

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி இன்று தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் பெச்சராஜி தொகுதியில் சாகர் ரபாரி மற்றும் ராஜ்கோட் தொகுதியில் வஷ்ரம் சங்கதியா உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். சாகர் ரபாரி விவசாய பிரச்சினைகளுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர், மேலும் இவர் கட்சியின் மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். சங்கதியா 2017 -ல் ராஜ்கோட் (கிராமப்புறம்) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சோம்நாத் தொகுதியில் ஜக்மல் வாலா போட்டியிடுகிறார். இவர் 2012 ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பழங்குடியினர் பிரிவில், சோட்டா உதய்பூர் தொகுதியில் அர்ஜூன் ரத்வாவை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியுள்ளது.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே அறிவித்தது. மேலும், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மாதம் அறிவித்தார். கடந்த ஆண்டு சூரத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் ஆம் ஆத்மி 27 இடங்களை வென்றது. பாஜக 93 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இந்த நம்பிக்கையுடன் அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் களம் இறங்குகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in