பஞ்சாப்: ஆம் ஆத்மி இத்தனை வாக்குகளை அள்ளியது எப்படி?

பஞ்சாப்: ஆம் ஆத்மி இத்தனை வாக்குகளை அள்ளியது எப்படி?

வாக்குக் கணிப்பு முடிவுகள் கணித்தபடியே பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய நிலவரத்தின்படி, 90-க்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், பஞ்சாபில் படரத் துடித்த பாஜக, காங்கிரஸிலிருந்து வெளியேறி கேப்டன் அமரீந்தர் சிங் தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி, ஒருகாலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம் ஆகியவற்றைத் தாண்டி ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபியரின் வாக்குகளைக் கவர்ந்தது எப்படி எனும் விவாதங்கள் நடக்கின்றன.

காங்கிரஸின் தவறான முடிவுகள்

காங்கிரஸைப் பொறுத்தவரை, அமரீந்தர் சிங் - சித்து மோதல், தேர்தல் நடப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு அமரீந்தர் சிங் பதவி விலகி சரண் ஜீத் சிங் சன்னி முதல்வரானது, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கும் மாநிலமான பஞ்சாபில், அந்த இனத்தைச் சேர்ந்த சரண்ஜீத் சிங்கை முதல்வராக்கினால் தேர்தலில் பட்டியலின மக்களின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று காங்கிரஸ் கருதியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றே இதுவரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் பலம்

பஞ்சாபில் பிற கட்சிகளைவிடவும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது ஆம் ஆத்மி கட்சிதான். தரமான மருத்துவமனைகள், பள்ளிகள், இலவச மின்சாரம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அக்கட்சி முன்வைத்தது.

ஒரு சீக்கியர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஆரம்பம் முதலே உறுதியாக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால், பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். முன்னதாக, “பகவந்த் மான் என் அன்புக்குரியவர். அவர் என் தம்பியைப் போன்றவர். கட்சியின் உயர்ந்த தலைவர்” என்று கேஜ்ரிவால் அவரைப் புகழ்ந்தபோதே, பகவந்த் மான் தான் முதல்வர் வேட்பாளர் எனும் எதிர்பார்ப்பு உருவானது.

முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பஞ்சாப் மக்கள் அலைபேசி மூலம் தங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று கூறி அதற்கான எண்ணையும் வெளியிட்டார் கேஜ்ரிவால். அதன்படி, 93 சதவீதம் பேர் பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததாகக் கேஜ்ரிவால் அறிவித்தார்.

ஸ்டாண்ட் அப் காமெடியனாகப் புகழ்பெற்றவரான பகவந்த் மான், 2011-ல் மன்ப்ரீத் சிங்கின் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் பஞ்சாப் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2014-ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019 மக்களவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் அவருக்கு வெற்றி கிடைத்தது. இந்த முறை சங்க்ரூர் தொகுதியில் அடங்கும் துரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். “ஆம் ஆத்மி கட்சி 80-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றும் பகவந்த் மான் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பாஜக மீதான பஞ்சாபியரின் கோபம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் சீக்கியர்கள் பெரும் பங்கு வகித்தனர். சீக்கியர்களின் புனித நாளான குரு நானக் ஜெயந்தி அன்று அந்தச் சட்டங்களைப் பிரதமர் மோடி திரும்பப் பெற்றபோதும் அவர் மீதான கோபம் பஞ்சாப் விவசாயிகளிடம் இருந்தது. நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க பஞ்சாபுக்கு அவர் சென்றிருந்தபோது விவசாயிகள் நடத்திய ஊர்வலம்தான், அவரைப் பாதிவழியில் பயணத்தை ரத்துசெய்து டெல்லி திரும்பச் செய்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த கேப்டன் அமரீந்தர் சிங் இந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மீதான விவசாயிகளின் கோபம் எல்லாம் தங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என்று காங்கிரஸ் கருதியது. ஆனால், காங்கிரஸ் மீதான எதிர்மறையான எண்ணம் பஞ்சாப் மக்கள் மத்தியில் அதிகமாகிக்கொண்டே வந்ததால் ஆட்சி மாற்றம் தேவை என பஞ்சாபியர்கள் தீர்மானித்துவிட்டது இந்தத் தேர்தலில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.

பகவந்த் மான் ஒரு குடிகாரர் என்று காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களைப் பஞ்சாபியர்கள் ஏற்கவில்லை என்பதையே இதுவரையிலான நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in