குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி இல்லை: அமித் ஷா கணிப்பு

அமித் ஷா
அமித் ஷா-

குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி இல்லை. எனவே அர்விந்த் கேஜ்ரிவாலின் கட்சி தனது வெற்றிக் கணக்கை கூட தொடங்காமல் போகலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமித் ஷா அளித்த பேட்டியில், “குஜராத்தின் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்த காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் முழுமையான திருப்தி கொள்கையை அமல்படுத்தியதே பாஜக மீது கடந்த 27 ஆண்டுகளாக மக்கள் மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைப்பதற்கு முக்கியக் காரணம். குஜராத்தில் இந்த முறை பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்யும். மக்கள் எங்கள் கட்சி மீதும், எங்கள் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்” என தெரிவித்தார்

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியின் போட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் அந்தக் கட்சியை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது மக்களின் முடிவு. குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி எங்கும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். ஒருவேளை ஆம் ஆத்மி கட்சியின் பெயர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலில் இடம் பெறாமல் போகலாம்" என்று அவர் கூறினார்.

குஜராத்தில் பாஜகவின் பிரதான போட்டியாளராக காங்கிரஸ் இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸைப் பற்றி பேசிய அமித் ஷா, "காங்கிரஸ் இன்னும் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது, ஆனால் அக்கட்சி நெருக்கடியில் உள்ளது, அதன் தாக்கம் குஜராத்திலும் தெரியும்" என்றார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு, "அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டும், ஒருவர் கடினமாக உழைத்தால் நல்லது என்று நான் எப்போதும் கருதுகிறேன். ஆனால் அரசியலில் நீடித்த முயற்சிகள் மட்டுமே பலனைத் தரும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in