ஆவேச தொண்டர்கள் அடி உதையால் ஓட்டமெடுத்த எம்எல்ஏ: வீடியோ வைரல்

ஆவேச தொண்டர்கள் அடி உதையால் ஓட்டமெடுத்த எம்எல்ஏ: வீடியோ வைரல்
Updated on
2 min read

டெல்லி மத்தியால தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் என்பவரை சொந்தக் கட்சியினரே அடித்து உதைக்கும் வீடியோவை பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 4 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் சீட்டுகளை ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் பெரும் தொகைக்கு விற்று வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை ஆஆக மறுத்து வந்தது. இந்நிலையில் சீட்டு பேர விவகாரத்தில் ஆஆக எம்எல்ஏ ஒருவரை அவரது கட்சியினரே அடித்து துவைத்த வீடியோவை டெல்லி பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

டெல்லி மத்தியால தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் குலாப் சிங் யாதவ். நேற்று இரவு ஷியாம் விஹார் பகுதியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற தேர்தல் பணி தொடர்பான கலந்தாய்வில் குலாப் சிங் யாதவ்வும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் வேட்பாளர் நியமனம் மற்றும் அது தொடர்பான பண பேர விவகாரம் வாக்குவாதத்தில் தொடங்கி அடிதடியாக வெடித்தது. இதில் எம்எல்ஏவுக்கு எதிராக ஆவேசமடைந்த தொண்டர்களில் சிலர் குலாப் சிங்கை தாக்க முயன்றனர். அருகிலிருந்தவர்கள் தடுத்த போதும் அடி உதை என எம்எல்ஏ மீதான தொண்டர்களின் பலப்பிரயேகம் அதிகமானது. அடி தாங்க முடியாது எம்எல்ஏ தெருவில் ஓட்டமெடுத்ததும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோவை பெருமளவில் பகிர்ந்து வரும் பாஜகவினர், டெல்லி தேர்தலுக்கான சீட்டுகளை ஆஆக பொறுப்பாளர்கள் விற்றது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது என்று வாதிடுகின்றனர். தொடர்ந்து எம்எல்ஏ சார்பில் பகிரப்பட்ட பதிவில், ’பாஜகவின் தூண்டுதல் பேரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது என்றும், பாஜகவிடம் விலை போனர்வர்கள் திட்டமிட்டு எம்எல்ஏவை தாக்கி வீடியோ எடுத்துள்ளனர்’ என்று விளக்கமளித்துள்ளனர். குலாப் சிங்கை தாக்கிய நபர்களுக்கு ஆதரவாக காவல்நிலையத்தில் பாஜகவினர் ஆஜராகி இருப்பதாகவும் வீடியோ ஒன்றை ஆஆக நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு பரப்பி வருகின்றனர்.

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால்

ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலமே தங்களது அரசியல் கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியினருக்கு, மோசடி மன்னன் சுகேஷ் முதல் டெல்லி வேட்பாளர் சீட்டு விவகாரம் வரை பண பேர குற்றச்சாட்டுகள் பெரும் சவாலாக மாறியிருக்கின்றன. வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலிலும் இதன் அதிர்வுகள் எதிரொலிக்க கூடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in