அடுத்தடுத்த வெற்றிகளுக்குக் குறி: வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தரும் ஆஆக!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

பஞ்சாப் மாநிலத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி கட்சி, தான் ஏற்கெனவே ஆட்சி செய்து வரும் டெல்லியில் 2022-23 நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்காக 800 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. மொத்த பட்ஜெட் மதிப்பு 75,800 கோடி ரூபாய்.

பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் பகவந்த் மான், மாநில அரசில் ஏற்கெனவே ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை பார்த்து வந்த 35,000 பேரின் நியமனம் பணிவரன்முறை செய்யப்பட்டு நிரந்தரமாக்கப்படும் என்றும் புதிதாக 25,000 பேரை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள ஆளெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்து மக்களுடைய பாராட்டைப் பெற்று வருகிறார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

தேர்தல் கணக்குகள்

அடுத்து 2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய மாற்றுக்கட்சியாக தேசிய அளவில் உருவாக வேண்டும், மத்திய ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற லட்சிய வேகம் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத், ராஜஸ்தான், இமாசல பிரதேசத்தில் அடுத்த மூன்று வாரங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பஞ்சாபில் அளித்த வாக்குறுதிகளை மேலும் வலுப்படுத்தி அளித்து மக்களுடைய ஆதரவைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அடுத்து இந்த மாநிலங்களில் பொதுக்கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து புதிய வேலைவாய்ப்புத் திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களை வென்று எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது ஆஆக. கொள்கை இல்லை, தொண்டர் பலம் இல்லை, கட்சிக்கு நிர்வாக அமைப்பு இல்லை என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் இறுமாந்திருந்த நிலையில் பெரிய சூறாவளியாக உருவெடுத்து வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லியில் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருந்து செயல்பட வேண்டிய சூழல். பஞ்சாப் அப்படியல்ல. எனவேதான் பொது விநியோக முறையில் புதுமையாக, வீடுகளுக்கே சென்று கோதுமை, சர்க்கரை, பாமாயில், அரிசி போன்றவற்றை வழங்கும் திட்டத்தை ஆஆக அரசு தொடங்கியிருக்கிறது.

என்னென்ன வேலைகள்?

டெல்லி துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா ஒதுக்கியுள்ள 800 கோடி ரூபாய், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு என்று கூறப்பட்டாலும் அது அதற்கான முன்முயற்சிகளுக்கு என்று தெரியவருகிறது. டெல்லியில் மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க 4,500 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசு மதிப்பிட்டிருக்கிறது. எந்தெந்தத் துறைகளில் சேவைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என்று அடையாளம் காணும் பணிகளை அரசு தொடங்கிவிட்டது.

டெல்லியில் ஆண்டுதோறும் ஒரு மாதத்துக்குத் தொடர்ச்சியாக வணிகத் திருவிழா நடத்துவது, இப்போது மாநகரின் ஐந்து பகுதிகளில் உள்ள மிகப் பெரிய மார்க்கெட்டுகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மேலும் அதிகம் பேர் வந்து செல்ல வழி செய்வது, பேருந்து பணிமனைகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி இடங்களில் வணிக வளாகங்கள் கட்டிப் பயன்படுத்துவது, ஆங்காங்கே போஜன சாலைகளை உருவாக்குவது, விதம் விதமான உணவுகளை ஒரே இடத்தில் பெற சமுதாய சமையல்கூடங்களை நிறுவுவது, வீடுகளுக்கும் பணியிடங்களுக்கும் சிற்றுண்டி போன்றவற்றை வாகனங்களிலேயே கொண்டுபோய் தயாரித்து சூடாக வழங்குவது, மின்னணு சாதனங்களைத் தயாரிக்க, விற்பனை செய்ய, பழுதுநீக்க இடம் தருவது ஆகியவை வேலைவாய்ப்புக்கு உதவும் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இவை போக மின்சார பேட்டரி வாகனங்களைத் தயாரிப்பது, பழுதுபார்ப்பது, பராமரிப்பது போன்றவற்றுக்கும் முன்னுரிமை தரப்படும். வீட்டுக் கூரைகளில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு, மழை நீர் சேகரிப்பு, வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி – பழச் செடிகள் சாகுபடி போன்றவற்றுக்கும் முன்னுரிமை தரப்படவுள்ளது. டெல்லியில் காய்கறி, பழங்கள், பூச்செடிகள், கீரைகள் சாகுபடி மூலம் மகளிருக்கு 25,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

2015-ல் டெல்லியில் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரையில் 1.78 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாகக் கூறிய சிசோடியா, 2020-ல் பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு மீண்டும வேலைவாய்ப்பு பெற எடுத்த முன்முயற்சிகள் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2015 டெல்லி சட்டப்பேரவை த் தேர்தலின்போது 8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி தந்து மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வென்றது. 2020-ல் அதே வாக்குறுதியை அளித்து 62 தொகுதிகளில் வென்றது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா

பஞ்சாப் மாநிலத் தேர்தல் வெற்றிக்கு முன்னதாகவே டெல்லி பட்ஜெட் தயாராகிவிட்டது. அங்கே வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்ற வாக்குறுதி அமோக வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கேற்ப டெல்லி பட்ஜெட்டில் புதிதாக பல அம்சங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்ததாக ஆஆக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2016-17-க்குப் பிறகு டெல்லி ஜிடிபி 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று துணை நிலை ஆளுநர் அனில் பஜாஜ், பட்ஜெட் தொடரின் கூட்ட தொடக்க உரையில் தெரிவித்தார். 2020-21-ல் 3,44,136 ரூபாயாக இருந்த நபர்வாரி வருவாய் 2021-22-ல் 4,09,982 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சிக்கிம், கோவாவுக்கு அடுத்தபடியாக நபர்வாரி வருமானத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் டெல்லி இருக்கிறது. (மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம், நாடாளுமன்றம், முப்படைகளின் தலைமையகம், பக்கத்து மாநிலங்களின் நெருக்கம் காரணமாக பெருகிய மக்கள் தொகை, வாணிபப் பெருக்கம் என்று எதுவுமே இல்லாமல் சிக்கிமும் கோவாவும் சாதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.)

இப்போது நாட்டின் அனைத்து மாநிலங்களுமே மக்களுக்கு நல்வாழ்வு திட்டங்களை அமல் செய்வதில் போட்டி போடுகின்றன. டெல்லி அரசின் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளும் ‘மொஹல்லா’ கிளினிக்குகளும் தேசிய அளவில் பாராட்டப்படுகின்றன. புதிய வேலைவாய்ப்பு திட்டங்களும் அவ்வாறே பேசப்பட்டு எல்லா மாநிலங்களிலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க மாநில அரசுகளுக்கு இடையே போட்டி ஏற்படுவது நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in