ஆம் ஆத்மிக்கு அடுத்த சோதனை: 2 புதிய அமைச்சர்களுக்கு போட்டாபோட்டி!

அரவிந்த் கேஜ்ரிவால் - மணிஷ் சிசோடியா - சத்யேந்தர் ஜெயின்
அரவிந்த் கேஜ்ரிவால் - மணிஷ் சிசோடியா - சத்யேந்தர் ஜெயின்

டெல்லி அமைச்சரவையின் 2 அமைச்சர்கள் கைது காரணமாக காலியான அவர்களின் பதவியிடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

2021 நவம்பரில் அரவிந்த் கேஜ்ரிவால் கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லி துணை முதல்வரும், கல்வி, பொதுப்பணித்துறை, கலால் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவருமான மணிஷ் சிசோடியாவை பிப்.26 அன்று சிபிஐ கைது செய்தது. இதனை முன்னிட்டு அவர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினா செய்தார்.

டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், பணமோசடி புகார்களின் கீழ் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாகி, இறுதியில் கைது செய்யப்பட்டு கடந்த 9 மாதங்களாக சிறையில் உள்ளார். எந்த பொறுப்பும் வழங்கப்படாது அமைச்சரவையில் நீடித்த இவரும் ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் வகித்த பொறுப்புகளில் மிக முக்கியமானவை தற்போதைக்கு, அமைச்சர்கள் கைலாஷ் கெலாட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு மாற்றப்பட்டுள்ளன. எனினும், காலியான அமைச்சரவையின் இடங்களுக்கு புதிதாக இருவரை நியமித்தாக வேண்டும். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக கட்சியிலும் ஆட்சியிலும் மணிஷ் சிசோடியா இரண்டாம் இடம் வகித்தபடியாலும், அவர் கவனித்த துறைகள் பிரதானமானவை என்பதாலும் அவர் இடத்தை பிடிப்பதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மத்தியில் போட்டி எழுந்துள்ளது.

ஏற்கனவே அரசியல் தலைவலிகளால் தவிக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இவை, திருகு வலியை தந்திருக்கின்றன. மேலும் இந்த போட்டியில் பாஜக தனது சித்து வேலைகளை காட்டுமோ என்ற கவலையிலும் ஆம் ஆத்மி ஆழ்ந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in