திகார் சிறையில் அர்விந்த் கேஜ்ரிவாலை கொல்ல சதி... ஆம் ஆத்மி அடுத்த குற்றச்சாட்டு

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

’மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியை பாஜக வெல்ல முடியாது போனால், அர்விந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைத்தே கொல்ல பெரும் சதி தீட்டியிருக்கிறார்கள்’ என ஆம் ஆத்மியின் தலைவர்கள் புதிய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி, ‘திகார் சிறையில் வைத்து கேஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக’ புதிய குண்டு ஒன்றை வீசியிருக்கிறார். கேஜ்ரிவால் பலமுறை கோரிக்கை வைத்தும் அவருக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என்றும், தனது வழக்கமான மருத்துவருடன் வீடியோ ஆலோசனை பெற மறுக்கப்படுகிறார் என்றும் அதிஷி குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி அமைச்சர் அதிஷி

"அர்விந்த் கேஜ்ரிவால் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வருகிறார். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க அவர் தினமும் 54 யூனிட் இன்சுலின் எடுத்துக்கொள்கிறார். இவ்வளவு கடுமையான நீரிழிவு இருப்பதால்தான், இன்சுலின் மற்றும் வீட்டில் சமைத்த உணவை பெற அவருக்கு நீதிமன்றம் அனுமதித்தது” என்று அதிஷி விளக்கி உள்ளார்.

"ஆனால் இன்று பாஜக, அமலாக்கத்துறை மூலம் கேஜ்ரிவாலின் உடல்நிலையை கெடுக்க முயல்கிறது. அதற்காக அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது" என்றும் அதிஷி சாடி உள்ளார். நீரிழிவு பாதிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் கேஜ்ரிவால் இனிப்புகள், பழங்களை எடுத்துக்கொள்வதாகவும், தேநீரில் அதிகம் சர்க்கரை கலந்து அருந்துவதாகவும் முன்னதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

அர்விந்த் கேஜ்ரிவால் - அமலாக்கத்துறை
அர்விந்த் கேஜ்ரிவால் - அமலாக்கத்துறை

அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஜுஹைப் ஹுசைனும், “நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படாத உணவுகள் மற்றும் இனிப்புகளை கேஜ்ரிவால் அதிகம் எடுத்துக்கொள்கிறார்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், “அவை அனைத்தும் மருத்துவரின் பரிந்துரை பெயரிலான செயற்கை இனிப்பூட்டிகள் மட்டுமே” என அதிஷி விளக்கம் தந்திருந்தார். அதுவும் நவராத்திரையை முன்னிட்டு பிரசாதமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அதிஷி விளக்கினார்.

இவற்றுக்கு மத்தியில் ’மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியை பாஜக வெல்ல முடியாது போனால், அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைத்தே கொல்ல பெரும் சதி தீட்டியிருக்கிறார்கள்’ என்றொரு பகீர் பழியை அதிஷி இன்று வீசியிருக்கிறார். சிறையிலிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலை முன்வைத்து, மக்களவைத் தேர்தலில் அனுதாப வாக்குகளை பெற இம்மாதிரி குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி சுமத்துவதாக பாஜக பதிலடி தந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in