ஜனாதிபதி உரையை புறக்கணித்த ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சிகள்: மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொள்ளவில்லை

ஜனாதிபதி உரையை புறக்கணித்த ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சிகள்: மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொள்ளவில்லை

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையை ஆம் ஆத்மி கட்சியும், பாரத் ராஷ்டிர சமிதியும் புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற காங்கிரஸ் எம்.பி.க்கள், ஸ்ரீநகரில் இருந்து விமானங்கள் தாமதமாக வருவதால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்தது குறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட தகவல்களின்படி, “ஜனாதிபதியின் உரை மத்திய அரசால் தயாரிக்கப்பட்டது மற்றும் மத்திய அரசின் பணிகளை உள்ளடக்கியது. மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதால், இந்த பேச்சைக் கேட்பதில் அர்த்தமில்லை” என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில் ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது.

கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியும் ஜனாதிபதி உரையை புறக்கணித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய பிஆர்எஸ் தலைவர் கே.கேசவ ராவ், “அரசாங்கத்தின் தோல்விகளையும், சாமானியர்களின் அவலத்தையும் முன்னிலைப்படுத்தவே ஜனாதிபதி உரையை புறக்கணிக்கிறோம். அவருடைய உரைக்கு நாங்கள் எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டோம். மத்திய அரசாங்கம் அனைத்துக் கட்சி கூட்டத்தை ஒரு சடங்காக மாற்றியுள்ளது, அதில் அவர்கள் எப்போதும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் அது நடக்காது.

வருமான சமத்துவமின்மை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஆளுநர்களின் தலையீடு, அதானி அறிக்கை போன்ற அனைத்து பிரச்சினைகளையும் நாங்கள் கையில் எடுப்போம்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பாரத் ஜோடோ யாத்திரையின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்குச் சென்ற ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் உரையில் பங்கேற்கவில்லை. மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாகும் காரணத்தால் அவர்களால் வர இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், “மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக வருவதால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் கார்கே ஜி மற்றும் பல எம்.பிக்கள் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையில் கலந்து கொள்ள இயலாது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in