’ஒரே நாளில் உருவான ஹெலிபேட்; 20 வருடமாகியும் வராத பேருந்து நிலையம்!’

கோவாவில் கேஜ்ரிவால் சாடல்!
’ஒரே நாளில் உருவான ஹெலிபேட்; 20 வருடமாகியும் வராத பேருந்து நிலையம்!’
அரவிந்த் கேஜ்ரிவால்

கோவா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பரப்புரை மேற்கொண்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார்.

டெல்லியில் ஆட்சியை தக்க வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, படிப்படியாய் வட மாநிலங்களில் கட்சியை வளர்த்து வருகிறது. கட்சியின் வளர்ச்சியை பல்ஸ் பார்க்கும் நோக்கில், ஆட்சியை பிடிப்பதற்கான தேர்தல் கோதாவிலும் இம்முறை குதித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் கோவாவில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆஆக முழுமூச்சுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

பிப்.14 அன்று கோவா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று(பிப்.11) பரப்புரை மேற்கொண்டார் அரவிந்த் கேஜ்ரிவால். அப்போது, கோவாவை இதுவரை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை ஒருபிடி பிடித்தார். ”காங்கிரஸ் கட்சிக்கு 27 ஆண்டுகள், பாஜகவுக்கு 15 ஆண்டுகள் என கோவாவை ஆட்சி செய்ய அனுமதித்தீர்கள். ஆனால் அவர்களால் கோவா மேம்பாட்டுக்கு எதுவுமே ஈடேறவில்லை. திரைமறைவில் இந்த 2 கட்சிகளும் கூட்டுசேர்ந்து கோவா வளங்களை கொள்ளையடிக்கவே செய்தார்கள்” என்று தாக்கினார்.

மேலும், “கோவா மக்களுக்கு நல்லது செய்யவும், மேம்பாட்டுக்கு உழைக்கவும் சற்றும் அவர்களுக்கு எண்ணமில்லை. அவ்வாறு எண்ணம் இருந்திருப்பின் எத்தனையோ நல்லது செய்திருப்பார்கள்” என்றவர், பாஜகவை பிரத்யேகமாய் குறிவைத்தார். முந்தைய தினம், பிரதமர் மோடியின் வருகைக்காக ஒரே நாளில் தயாரான ஹெலிபேட் குறித்து மக்களுக்கு நினைவூட்டியவர், “ஆள்பவர்களால் 24 மணி நேரத்தில் ஹெலிபேட் தயார் செய்ய முடிகிறது. ஆனால் அதன் அருகில், 20 வருடமாக ஒரு பேருந்து நிலையத்துக்கான பணிகள் தட்டுத் தடுமாறி வருகின்றன. இதில் ஹெலிபேட் அமைத்ததை குறை சொல்லவில்லை. ஹெலிபேட் - பேருந்து நிலையம் என இரண்டு பணிகளையும் அவர்கள் முடிக்க எடுத்தக்கொண்ட காலத்தையும் அதன் பின்னிருக்கும் முரணையும் மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்” என்றார்.

கடைசியாக ’பிப்.14 அன்று நடைபெறவிருக்கும் தேர்தல், சாதாரண தேர்தல் அல்ல. கோவா மக்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மாற்றுவதற்கான தேர்தல்’ என்று முழங்கி முடித்தார் கேஜ்ரிவால்.

பாஜக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி என பலமுனைப்போட்டி கொண்ட இந்த தேர்தலில், உள்ளூர் செல்வாக்கில் திளைத்த சுயேட்சைகளும் கணிசமான எண்ணிக்கையில் போட்டியிடுகின்றனர். பிரதான கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை கிட்டாது போனால், இந்த சுயேட்சைகள் காட்டில் கனமழை வாய்க்கும். அந்த வகையில் கட்சிகளின் முதல்வர் வேட்பாளரைவிட, கோவாவுக்கு அப்பால் அறியப்படாத சுயேட்சை வேட்பாளர்களே, இந்த சட்டமன்றத் தேர்தலின் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள். இந்த சுயேட்சைகளில் வெற்றி வாய்ப்புள்ளவர்களை வளைக்கவும் பிரதான 2 கட்சிகள் இப்போதே தயாராக உள்ளன. இந்த குதிரை பேர கணக்குகளில் ஆர்வம் காட்டாத ஆஆக, வீடுவீடாக மக்களை சந்திப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

Related Stories

No stories found.