கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

வக்ஃப் வாரிய முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

2020 ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட டெல்லி வக்ஃப் வாரியத்தில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் நேற்று மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

முதலில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவினர் அமனதுல்லா கானை கைது செய்தனர்.

தில்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராக உள்ள அமனதுல்லா கான், ​​அனைத்து விதிமுறைகளையும், அரசாங்க வழிகாட்டுதல்களையும் மீறி 32 பேரை சட்டவிரோதமாக பணியமர்த்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டது. டெல்லி வக்ஃப் வாரியத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி, இத்தகைய சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கு எதிராக தெளிவாக அறிக்கை அளித்து குறிப்பாணை வெளியிட்டார் என்று லஞ்ச ஒழிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் டெல்லி வக்ஃப் வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்றும், அதில் டெல்லி அரசாங்கத்தின் உதவி மானியங்கள் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமனதுல்லா கானின் வீட்டிலிருந்து ரூ.24 லட்சம் ரொக்கமும், சட்டவிரோதமான மற்றும் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, "அமனதுல்லா கானின் கைது அடிப்படை ஆதாரமற்றது, அவர் மீதான வழக்கு முற்றிலும் போலியானது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியை களங்கப்படுத்தவும், எம்எல்ஏவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சியாகும்" என்று கூறியுள்ளது.

முன்னதாக, புதிய வக்ஃப் வாரிய அலுவலக கட்டடம் கட்டியதால், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அமனதுல்லா கான் ட்வீட் செய்திருந்தார்.

ஏற்கெனவே டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சூழலில் மற்றொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளதால், பாஜக - அர்விந்த் கேஜ்ரிவால் இடையிலான மோதல் வேகமெடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in