எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி மாநகராட்சியில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சி விலைக்கு வாங்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்களுடன், மூத்த ஆம் ஆத்மி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களைவிட 30 இடங்கள் குறைவாகப் பெற்றாலும், பா.ஜ.க. மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தியது போல், கேவலமான விளையாட்டுகளில் டெல்லியிலும் இறங்கியுள்ளது.

மிரட்டல் மற்றும் பணத்தின் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்து, மக்களின் ஆணையை அவமதிக்க முயற்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். பாஜக ஒரு வெட்கமற்ற கட்சி, எங்களை விட 30க்கும் குறைவான இடங்களைப் பெற்றாலும், மேயர் அவர்களுடையதாக இருக்கவேண்டும் என முயற்சிக்கிறார்கள்" என்று கூறினார்.

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும், மேயர் தேர்தலில் மாற்றி வாக்களிக்க தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து பேசிய சஞ்சய் சிங்,"இவர்கள் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், எனவே அர்விந்த் கேஜ்ரிவாலுடன் நேர்மையுடனும் பக்தியுடனும் நிற்பார்கள். எங்கள் கவுன்சிலர்கள் பாஜகவின் எல்லா தந்திரங்களையும் அம்பலப்படுத்துவார்கள்" என்று கூறினார்.

முன்னதாக, தங்கள் கவுன்சிலர்களை, ஆம் ஆத்மி கட்சி கவர்ந்து இழுக்க முயற்சிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. கேஜ்ரிவாலின் ஏஜென்டுகள், கவுன்சிலர்களை கவர்ந்திழுக்க டெல்லி தெருக்களில் சுற்றித் திரிகிறார்கள் என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in