‘குஜராத்தில் 2022ல் ஆம் ஆத்மி ஆட்சிதான்’ - அடித்துக்கூறும் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், "பாஜக ஆட்சியில் திருப்தியடையாதவர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். 2022ல் குஜராத்தில் நிச்சயம் ஆம் ஆத்மி ஆட்சிதான்" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

குஜராத் அகமதாபாத்தில் நேற்று 6,988 ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் பதவியேற்ற நிகழ்ச்சியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், "நாங்கள் இங்கு கேவலமான அரசியலையோ அல்லது ஊழலையோ செய்ய வரவில்லை. மக்களுக்கு உதவ வந்துள்ளோம். டெல்லி மற்றும் பஞ்சாபில் நாங்கள் நல்ல பணிகளை செய்து வருகிறோம். உங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு வீணாக்காதீர்கள். எனவே பாஜகவில் திருப்தியடையாதவர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். குஜராத்தில் உள்ள சாமானியர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்க்கிறார்கள். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகளோ அல்லது தொண்டர்களோ இல்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஒரு மாதத்திற்குள் நாங்கள் பாஜகவை விட பெரியவர்களாகி விடுவோம்” என்று கூறினார்.

2022 குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்திய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், "குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. 27 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் சோர்வடைந்துள்ளனர். காங்கிரஸால் அவர்களை மாற்ற முடியாது என பாஜக நினைக்கிறது. அவர்கள் ஈகோவை வளர்த்துக் கொண்டுள்ளனர். மக்கள் இந்த முறை ஆம் ஆத்மி கட்சியை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். எனவே 2022ல் குஜராத்தில் நிச்சயம் ஆம் ஆத்மி ஆட்சிதான்” என்று உறுதி கூறினார்

பிப்ரவரி 2021ல் நடந்த சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜக 93 இடங்களை வென்றது, அதே நேரத்தில் அந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களை கைப்பற்றியது. சூரத் தேர்தல் தந்த நம்பிக்கையுடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலை ஆம் ஆத்மி எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in