கர்நாடகாவிலும் களம் இறங்கியது ஆம் ஆத்மி: பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் போட்டி!

கர்நாடகாவிலும் களம் இறங்கியது ஆம் ஆத்மி: பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் போட்டி!

பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கர்நாடகா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரித்வி ரெட்டி அறிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிட விரும்பும் பெங்களூருவாசிகள் அனைவரையும் 'வேட்பாளர் தேடல் குழுவை' தொடர்பு கொள்ளுமாறு பிரித்வி ரெட்டி அழைப்பு விடுத்தார். ‘கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வேட்பாளர் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களை தேர்தலில் போராடி வெற்றிபெற ஆம் ஆத்மி கட்சி அழைத்துள்ளது.

பெங்களூரு தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு பேசிய பிரித்வி ரெட்டி, "டெல்லியின் நேர்மையான ஆட்சி நாடு முழுவதும் முன்மாதிரியாக உள்ளது. இப்போது ​​பஞ்சாபிலும் ஊழலற்ற ஆட்சி உருவாகியுள்ளது. இதை ஏன் பெங்களூரில் செயல்படுத்த முடியாது?. பெங்களூருவுக்கு மாற்றத்தை கொண்டுவர மக்கள் முன்வர வேண்டும். மக்கள் ஒரு படி முன்வந்தால் நமது பலம் அதிகரிக்கும். நாம் அனைவரும் சேர்ந்து பெங்களூரைக் காப்பாற்ற முடியும்" என்று கூறினார்.

மேலும், “ கர்நாடகாவில் ஆம் ஆத்மி கட்சி கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் சிறப்பான எதிர்க்கட்சியாகவும், பாஜக அரசின் ஊழல், அநீதி மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய ஒரே கட்சியாகவும் உள்ளது. பாரம்பரிய கட்சிகள் இத்தனை நாட்களாக பண பலம் மற்றும் ஆள் பலத்துடன் அரசியல் செய்து வருகின்றன. குடும்ப அரசியலில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஆம் ஆத்மி மக்கள் பிரச்சினைகளுக்கு தீவிரமாக உதவி வருகிறது. இப்போது ஆம் ஆத்மி கட்சி பெங்களூரு நகரம் முழுவதும் வலுவான நிலையில் உள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in