ஒருவர் 10 மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒரே ஆதார் எண் போதும்; இணைப்பு ரத்தாகாது! - அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் உறுதி

ஒருவர் 10 மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒரே ஆதார் எண் போதும்; இணைப்பு ரத்தாகாது! - அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் உறுதி

"ஒருவர் தன் பெயரில் 10 மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒரே ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படாது" என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழகம் முழுவதும் இன்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த சிறப்பு முகாமை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும். பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் இதற்கான பணிகள் நடைபெறும். எனவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொண்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளைச் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டுக்கு உள்ளாக பயன்படுத்தக்கூடிய, குறிப்பாக, குடிசை வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 100 யூனிட் இலவச மின்சாரமானாலும் சரி, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவசம் மின்சாரமாக இருந்தாலும் சரி, விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் சரி ஏற்கெனவே அரசு நடைமுறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ, இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கக்கூடிய மானியங்களுக்கான அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

உண்மைக்கு மாறாக சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மற்றும் சமூக வலைதளங்களில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் இதெல்லாம் ரத்தாகிவிடும் என்ற தவறான தகவல்கள், தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இப்போது நான் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்கெனவே இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய மின் இணைப்புக்கான அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். எவ்வளவு பேர் சொந்த வீட்டில் குடியிருக்கிறார்கள், எவ்வளவு பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது என்பது குறித்த எந்த விதமான தரவுகளும் மின்வாரியத்தில் இல்லை. ஏறத்தாழ ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்பு தாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தன.

மின்சார வாரியத்தை மேம்படுத்தவும் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனமயமாக்கவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் அரசு தொடர்ந்து வழங்கக்கூடிய இலவச மின் திட்டங்களும், அரசு வழங்கக்கூடிய மானியமும் தொடர்ந்து பழைய நடைமுறை என்ன இருக்கிறதோ அதன்படி தொடர்ந்து பின்பற்றப்படும். ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 3 இணைப்புகள் வைத்திருந்தாலும் சரி அவர்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

பொதுமக்கள் ஐந்து இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு 100 யூனிட் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மக்கள் ஏன் அச்சப்படுகிறார்கள் என்றால், ஒரு யூனிட்டுக்கு தான் 100 யூனிட் இலவசமாக கொடுப்பார்கள், நாம் ஏற்கெனவே 3 இணைப்பு வைத்துள்ளோம். அது ரத்தாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறான ஒரு கருத்து. எத்தனை இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

மின் கட்டணம் செலுத்துவதற்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. பொதுமக்கள் தாராளமாக மின் கட்டணம் செலுத்தலாம். ஒருவர் 4 மின் இணைப்புகளை பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரே மொபைல் எண்ணில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஒரே ஆதார் எண்ணில் 10 மின் இணைப்பு இருந்தாலும் இணைத்துக் கொள்ளலாம். மின் இணைப்பு பெற்றவர்கள் இறந்திருந்தால் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி உரிய ஆவணங்களைக் கொடுத்து பெயரை மாற்றிக் கொள்ளலாம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in