கனடாவில் மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தமிழக வம்சாவளி பெண்!

கனடாவில் மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தமிழக வம்சாவளி பெண்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார். "மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

கனடாவில் உள்ள 10 மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று, மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். இதனிடையே, புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமை பதவி, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் ஜான் அறிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத் துறை அமைச்சர் டேவிட் எபி (46) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை (32) களமிறங்கியுள்ளார். நவம்பர் 13-ம் தேதி தொடங்கும் வாக்கு பதிவு டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 3-ம் தேதி உட்கட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுபதோடு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வராக பதவியேற்பார். அடுத்து 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக களமிறங்குவார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி அப்பாதுரை தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். அவருக்கு 6 வயது இருக்கும்போது பெற்றோர் கனடாவில் குடியேறினர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் குக்குவிட்லாம் நகரில் அவரது குடும்பம் வசிக்கிறது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஹார்பர் நகரில் செயல்படும் காலேஜ் ஆப் அட்லான்டிக் கல்லூரியில் சர்வதேச அரசியல், பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார். சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட அவர், ஐ.நா. சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து அஞ்சலி அப்பாதுரை கூறுகையில், "மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுகிறேன். மனித உரிமைகள், சுற்றுச்சூழலை காக்க போராடி வருகிறேன். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் பருவநிலை மாறுபாட்டை தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். இதன்காரணமாகவே பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in