பேப்பரால் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: நடந்தது என்ன?

பேப்பரால் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: நடந்தது என்ன?

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண்ணை தாக்குவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக தமிழக அரசின் மீதும், அதன் அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதுமட்டுமின்றி அவர்களது ஊழல் பட்டியல்களையும் வெளியிட்டு விடுவேன் என்று கூறி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்திருந்தார். பின்னர், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மீது அவர் தெரிவித்த புகார் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

இந்த வரிசையில், தற்போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெண் ஒருவரை தாக்கும் வீடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, வீடியோவில் உள்ள பெண் விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தைச் சேர்ந்த கலாவதி என்பது தெரியவந்தது. திருமணம் ஆகாத இவர், கூலி வேலை செய்து வரும் நிலையில், தனது வயதான தாய்- தந்தையை பார்த்துக் கொள்வதற்கு போதிய பணம் இல்லாததால் அமைச்சரிடம் முதியோர் உதவித்தொகை கேட்க வந்துள்ளார். மேலும், நீண்ட நாட்களாக அலைந்தும் உதவித்தொகை கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த கலாவதி, அமைச்சர் முன் கடகடவென பேசியிருக்கிறார். அவரை அமைதிப்படுத்துவதற்காக அமைச்சர் தன் கையில் வைத்திருந்த பேப்பரால் தலையில் தட்டியதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இந்த காணொலியை அண்ணாமலை வெளியிட்ட பிறகு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in