
குமரி மாவட்டம், குழித்துறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டுவதில் திமுக நகரச் செயலாளருக்கும், அதேகட்சியைச் சேர்ந்த குழித்துறை நகர்மன்றத் தலைவருக்கும் இடையே இன்று கடும் வாக்குவாதம் எழுந்தது. பொதுமக்கள் முன்னிலையிலேயே வெடித்த இந்த கோஷ்டி பூசல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன்.ஆசைத்தம்பி உள்ளார். இவர் குழித்துறை பகுதி முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் போஸ்டர்கள் ஒட்டியிருந்தார். இந்த நிலையில் குழித்துறை நகர திமுக செயலாளர் வினு என்பவர், சேர்மன் பொன்.ஆசைத்தம்பி ஒட்டியிருந்த போஸ்டர்களின் மேல், தமிழக அரசின் சாதனை விளக்கப் போஸ்டர்களை ஒட்டினாராம். இதனை இன்று காலையில் பார்த்த பொன்.ஆசைத்தம்பியும் அவரது ஆதரவாளர்களும் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர்.
அப்போது அங்கு சிறிதுநேரத்தில் நகரச் செயலாளர் வினுகுமாரும் தன் ஆதரவாளர்களுடன் வந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற பொதுமக்களில் சிலர் சேர்மன் பொன்.ஆசைத்தம்பியை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.