பெண்களுக்கு சமவாய்ப்பு தரும் சமூகமே முன்னேறும்! -அமைச்சர் பி.டி.ஆர்

மதுரை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு
அமைச்சர் பி.டி.ஆர் பிரச்சாரம்
அமைச்சர் பி.டி.ஆர் பிரச்சாரம்

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 77 வார்டுகளில் திமுகவும், 23 வார்டுகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். தனது, மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட 57-வது வார்டில் போட்டியிடும் இந்திராணி பொன்வசந்த்துக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது:

“கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குழப்பமான வார்டு மறுவரையறையில் திருப்தி இல்லாதபோதும் கூட, மக்களின் அடிப்படை தேவைகளை மனதில் கொண்டு இந்தத் தேர்தலை தற்போது கட்டாயமாக நடத்தியே தீர வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்கெல்லாம் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படுகிறதோ, அந்த சமூகம் முன்னேறிய சமூகமாகத் திகழும். அதன்படி, மதுரை மத்திய தொகுதியில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் 13 பெண்கள் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசிச பாஜகவுக்கு எதிராக வலிமையான குரல் எழுப்பிட, நல்ல மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள். வாக்குக்கு பணமே தராமல் இரண்டு முறை மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதேபோல இந்தத் தேர்தலிலும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்   பழனிவேல் தியாகராஜன் ஆரப்பாளையம்  பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆரப்பாளையம் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

எதிர்க்கட்சியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதே, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிக அளவு திட்டப்பணிகளை நிறைவேற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் என்று பெயர்பெற்றதோடு, திட்டமிடல், தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி முன்னுதாரணமாகச் செயல்பட்டேன். அதன் பயனாக இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பளித்த போது, மாண்புமிகு தமிழக முதல்வர் எனக்கு நிதி அமைச்சர் என்ற உயரிய பொறுப்பை அளித்ததோடு, திட்டமிடல் மற்றும் மனிதவள மேலாண்மை துறையை அளித்தார். சரிவடைந்து இருந்த தமிழகத்தின் பொருளாதார நிலையில் சீர்திருத்தத்தை கொண்டுவர பல்வேறு திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதற்கான நிதிகளை ஒதுக்கிடும் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். மதுரையின் வளர்ச்சிக்காக இன்னும் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வரின் ஒப்புதலோடு செயல்படுத்திட உள்ளோம். ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்குப் பணிக்காக ரூ.25 கோடி, ஒருங்கிணைந்த குடிநீர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நிறைவேற்ற ரூ.500 கோடி என முதல்வர் அறிவித்துள்ளார். அந்தப் பணிகளை எல்லாம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்திட, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால்தான் இணைந்து மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட இயலும்.

அது மட்டுமல்லாமல் உங்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு, செயல்திறன்மிக்க மாமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். மாநில அளவில் மாவட்ட அளவில் நடைபெறும் நல்லாட்சி உங்களின் அருகில் உள்ளாட்சியிலும் தொடரவும், லஞ்சம், ஊழலில் திளைத்து கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சியை செயலற்ற நிலையில் வைத்திருந்த அவலத்தைப் போக்கிடவும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள்”. இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் இடையே, ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அமைச்சர். ஆரப்பாளையம் மற்றும் மோதிலால் தெருவில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்த அவர், முனியாண்டி கோயிலில் கட்சியினருடன் வழிபாடு நடத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in