பாஜக அலுவலகத்தில் எல்.முருகனுக்கு தனி அறை: அண்ணாமலைக்கு செக் வைத்த தலைமை

பாஜக அலுவலகத்தில் எல்.முருகனுக்கு தனி அறை: அண்ணாமலைக்கு செக் வைத்த தலைமை

பாஜக தமிழக தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வைத்தியராம் தெருவில் தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயம் உள்ளது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோருக்கு மட்டுமே தனி அறைகள் உள்ளன. இந்த நிலையில் திடீரென மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் ஆட்சிப் பொறுப்புக்கு செல்பவர்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதில்லை. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சரான போது அவரது மாநில தலைவர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் அரசியல் களத்தை சூடுபறக்க வைத்தாலும், கட்சியில் அவர் மீது அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்கட்சியினருடன் அவர் சமரசப்போக்கு கொண்டுள்ளதாக கட்சியின் தலைமைக்கு அமைப்புச்செயலாளர் கேசவவிநாயகம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அண்ணாமலைக்கு செக் வைக்கும் வகையில், பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும் அறை வழங்கி அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இருந்த அறை தற்போது எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, " பாஜக மாநிலத்தலைமை என்பது அமைப்புச் செயலாளராக உள்ள கேசவவிநாயகம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அண்ணாமலை வருகைக்குப் பின் அது தனிப்பாதை போட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் அவர் தனித்து முடிவெடுப்பதாக கட்சியின் மத்திய தலைமைக்குப் புகார் சென்றதன் காரணமாக, அண்ணாமலையோடு சேர்ந்து தமிழகத்தில் கட்சிப் பணியாற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு கட்சி உத்தரவிட்டுள்ளது. அதன் படி அவருக்கு கமலாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது" என்றனர். இதன் காரணமாக தமிழக பாஜகவில் இரட்டைத்தலைமை உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி பாஜகவினரிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in