ஆளுநருக்கு எதிராக மனு; சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றத் தீர்மானம்: அடுத்தடுத்து காய்நகர்த்தும் திமுக

ஆளுநருக்கு எதிராக மனு; சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றத் தீர்மானம்: அடுத்தடுத்து காய்நகர்த்தும் திமுக

ஆளுநர் உரை  தமிழகத்தை பரபரப்பாக்கி இருக்கிற நிலையில் அதை வைத்தே தனது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக.  ஆட்டத்தின் தொடர்ச்சியாக இன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் திமுகவால் நிகழ்த்தப்படுகிறது.

தமிழக ஆளுநராக ரவி நியமிக்கப்பட்ட போதில் இருந்து தமிழக அரசுக்கும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் அவருக்கு ஒத்துவரவில்லை. பல்வேறு விஷயங்களில் ஆளுநரிடம் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் சில பகுதிகளை தவிர்த்து, சில வார்த்தைகளை சேர்த்தும் உரையாற்றியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி  மாநிலத்தின் கொள்கைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக நடந்து கொள்ளும் தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி  குடியரசுத் தலைவரை சந்தித்து  தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முறையிடுகின்றனர். ஒரு மாநிலத்தின் ஆளுநரை மாற்றக்கோரி  அந்த மாநிலத்தின்  பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரிடம் முறையிடுவது இந்திய அளவில் பெரிதாக கவனிக்கப்படுகிறது.

தேசிய அளவில் இப்படி ஒரு அதிரடி வேலையைச் செய்யும் திமுக மாநில அளவிலும் இன்று சட்டப்பேரவையில்  அதிரடியை செய்கிறது.  மத்திய அரசால் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு  புறக்கணிக்கப்பட்டிருக்கிற சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தனி தீர்மானத்தை முதல்வர் கொண்டு வருகிறார்.

கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்தின் தூத்துக்குடி -ராமேஸ்வரம்  உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளும் வளம் பெறும்,  வர்த்தகம் பெருகும். மேலும் இவ்வழியாக செல்லும் கப்பல்களின் பயண நேரம் குறையும் என்று கூறப்பட்ட நிலையில் ராமர் பாலம் பாதிக்கப்படுவதால் அதனை நிறைவேற்ற முடியாது என்று மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.  நீதிமன்ற தீர்ப்பை ஒரு வகையில் காரணம் காட்டி கிடப்பில் போட்டு வைத்திருக்கிற நிலையில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.

ஆளுநரை எதிர்த்து  குடியரசு தலைவரிடம் முறையிடும் திமுக,  மத்திய அரசை எதிர்த்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற  தீர்மானத்தை கொண்டுவந்து தனது அதிரடியை தொடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in