`ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது; கட்சியை அழிவுப்பாதைக்குத்தான் கொண்டு செல்லும்'- வைத்திலிங்கம் திடீர் ஆவேசம்

`ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது; கட்சியை அழிவுப்பாதைக்குத்தான் கொண்டு செல்லும்'- வைத்திலிங்கம் திடீர் ஆவேசம்

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது செல்லாது எனத் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தனித்தனியே ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாகவே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஓபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “ஒற்றைத் தலைமை பிரச்சினை தொடர்பாக தம்பிதுரை ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் எண்ணம் போல் கட்சி வலுப்பெற வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து தமிழ்நாட்டில் நூறு ஆண்டுக் காலம் அதிமுக வலுவான நிலையில் செயல்பட வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. இதைக் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதாக அவர் கூறிச் சென்றுள்ளார்.

23-ம் தேதி பொதுக் குழுக் கூட்டத்திற்கு இருவரும் கையெழுத்துப் போட்டு கட்சி நிர்வாகிகளை அழைத்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறோம். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் சம்மதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது செல்லாது. தலைமையில் இருப்பவர்கள் இறந்து போனால்தான் பொதுக்குழுவில் தலைமை இல்லாமல் தற்காலிகமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடியும். ஒருங்கிணைப்பாளர் சம்மதம் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்த இயக்கத்தை அழிவுப் பாதைக்குத்தான் கொண்டு செல்லும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in