ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேச்சு; கோவை பாஜக தலைவர் அதிரடி கைது: நிர்வாகிகள் மறியலால் பதற்றம்

ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேச்சு; கோவை பாஜக தலைவர் அதிரடி கைது: நிர்வாகிகள் மறியலால் பதற்றம்

திமுக எம்பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, "நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.

இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்" என்றார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் இந்து முன்னணி சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

இதையடுத்து, பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல்நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் பாலாஜி உத்தம ராமசாமியை இன்று அதிகாலையில் கைது செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து, அங்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். பாஜகவினர் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in