
இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணமான சுயநலவாதிகள் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை கைது செய்ய கோரி ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் அதிமுகவின் பொதுக்குழு கூட உள்ளது. இந்நிலையில், ஒரு தரப்பினர் ஓபிஎஸ்சை ஆதரித்தும், மற்றொரு தரப்பினர் ஈபிஎஸ்சை ஆதரித்தும் மாறி மாறி போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், மத்திய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரான எஸ்.ராஜேந்திரன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், "எடப்பாடி பழனிச்சாமியின் துரோக கூட்டத்தை கைது செய்!" என்று குறிப்பிட்டுவிட்டு, "அம்மா அவர்களால் மூன்று முறை முதல்வரான ஓ. பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீசி, தகாத வார்த்தைகளைப் பேசி, ஒன்றரை கோடி தொண்டர்களின் சொந்தமான தலைமை கழகத்தை சூறையாடிய கயவர்களையும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணமான சுயநலவாதிகள் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை கைது செய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோக்கல் அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கூறும் போது, "எஸ்.ராஜேந்திரன் கட்சியின் மூத்த நிர்வாகி. அவர் இதுபோன்று ஒட்டி இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான எங்களது மனநிலையும் இதே போன்று தான் உள்ளது" என்றனர்.