தங்கத் தமிழ்செல்வன்- ஓபிஎஸ் மகன் இடையே கடும் வாக்குவாதம்: கோயில் முன்பு நடந்த களேபரம்!

தங்கத் தமிழ்செல்வன்- ஓபிஎஸ் மகன் இடையே கடும் வாக்குவாதம்: கோயில் முன்பு நடந்த  களேபரம்!

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் தங்கத் தமிழ்செல்வனுக்கும், ஓபிஎஸ்ஸின் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த கோயிலின் அடிப்படை தேவைகளை ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். மேலும் கார்த்திகை தீபம் அன்று ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் தீபம் ஏற்றி வந்தனர்.

இந்த ஆண்டு கோயில் செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் தீபம் ஏற்றக்கூடாது என்றும் தங்கத் தமிழ்செல்வன் கோரிக்கை வைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கைலாசநாதர் கோயிலில் நாங்கள்தான் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று கூறினார். இதையடுத்து தங்கத் தமிழ்செல்வன் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே கோயில் செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கோயில் பூசாரியை வைத்து தீபம் ஏற்றியதால் தங்கத் தமிழ்செல்வன் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கோயிலில் சென்று குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர் இது குறித்து தங்கத் தமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் இருக்கும் கோயில்களில் அறநிலையத்துறை செயல் அலுவலர் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் தங்கத் தமிழ்செல்வன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in