கையில் குவாட்டர் பாட்டில்; காருக்குள் குத்தாட்டம்: கலகம் செய்த கடலூர் திமுகவினர்!

கையில் குவாட்டர் பாட்டில்; காருக்குள் குத்தாட்டம்: கலகம் செய்த கடலூர் திமுகவினர்!

'ஸ்டாலின் தான் வாராரு' என்ற பாடல் காருக்குள் ஒலிக்க, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்  கையில் குவாட்டர் பாட்டலுடன்  குத்தாட்டம் போடும்  வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த நிலையில் அந்த வீடியோவில் இருப்பவர்கள் கடலூர் மாவட்ட திமுகவினர் என்று தெரிய வந்துள்ளது.

அந்த  வீடீயோவில் உள்ளவர்  கடலூர் மாவட்டம், அண்ணாகிராம ஒன்றியம், (மேல்கவரப்பட்டு தட்டாம்பாளையம்) ஒன்றிய திமுக கவுன்சிலர் குமரகுரு என்று கூறப்படுகிறது.  இவர் கட்சிப் பாடலுக்கு குடியும், கும்மாளத்துடன் ஆட்டம் போட்டுவிட்டு  காரில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச்  சென்றிருக்கிறார்.  அவருடன் திமுக கிளைச்செயலாளர் தாமோதரன், மேலும் இருவரும் வந்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் பின் அங்கிருந்த கள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ராஜசேகரிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த  கீழ்கவரப்பட்டு அதிமுக கவுன்சிலர் நளினியின் கணவர் பிரகாஷ் என்பவரிடமும் தகராறு செய்துள்ளனர். இதனால் தகராறு முற்றியதில் பிரகாஷை அவர்கள் அங்கிருந்து விரட்டி அடித்திருக்கின்றனர்.

அப்போது  ஒன்றிய அலுவலகத்தில் மேலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் இருந்தும்  அவர்களை எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் தாக்குதலுக்குள்ளான கவுன்சிலர் ராஜசேகர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

திமுக கவுன்சிலரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவர் மீது திமுக தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in