
ஆவினும், பால்வளத்துறையும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆவினில் அவர் செய்துள்ள ஊழல் முறைகேடுகளில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்வதால் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் நிறுவனர் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினில் கணக்கிலடங்கா முறைகேடுகள் நடைபெற்றிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடைபெற்று, திமுக அரியணை ஏறிய பிறகு புதிய பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சா.மு.நாசர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது, அவர் தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் ஒன்றியத்தில் இருந்து தனது சொந்த பயன்பாட்டிற்காக சுமார் 1.5 டன் இனிப்புகள் கொண்டு சென்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சரின் குற்றச்சாட்டினை தொடர்ந்து இது தொடர்பாக ஈரோடு மாவட்ட பால்வள துணைப் பதிவாளர் ராஜராஜன் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது "அந்த வாகனத்தில் என்ன இருந்தது என தெரியும், ஆனால் அது எவ்வளவு இருந்தது என தெரியாது", என்று அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் சேலத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் முறையாக கணக்கிடப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகைக்கு அனுப்பிய பொருட்களில், எவ்வித முறைகேடும் கண்டுபிடிக்க இயலவில்லை என விசாரணை அதிகாரி தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
அதுமட்டுமின்றி ஆவினின் செலவில் கூட்டுறவு சங்க பணியாளர்களின் உதவியுடன் கணக்கில் வராத அளவில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விருதுநகருக்கு அனுப்பப்பட்டுள்ளதும், ஆனால் எவ்வளவு ரூபாய்க்கு? அல்லது எவ்வளவு எடைக்கு? இனிப்புகள் அனுப்பப்பட்டன, அதனால் ஆவினுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என விசாரணை அதிகாரிகள் சாதாரணமாக தெரிவித்திருப்பது தவறிழைத்தவர்களையும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும் காப்பாற்றுவதற்குத் தானோ? என்கிற சந்தேகம் எழுகிறது.
தனியார் பால் குறித்து ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பால் நிறுவனங்களும் ராஜேந்திர பாலாஜியும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக போவதாக முடிவானதால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தீபாவளி இனிப்புகளை எடுத்துச் சென்ற விவகாரத்தில் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ராஜேந்திர பாலாஜியை தப்பிக்க வைக்க அவருக்கு சாதகமாக ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் செயல்பட்டு வருகிறதோ? என்கிற சந்தேகம் எழுகிறது.
மேலும் தீபாவளி இனிப்புகள் விவகாரத்தில் குறைந்தபட்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு கூட உத்தரவிடாமல் ஆவினோடு நகமும், சதையுமாக இருக்கும் பால்வளத்துறையின் பால்வள துணைப் பதிவாளர் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டதன் மூலம் "பாலுக்கு பூனையை காவல் வைப்பது போல் அமைந்து, அதன் விசாரணை தற்போது அந்த முறைகேட்டை நீர்த்துப் போகச் செய்துள்ளது.
இந்த ஒரு விவகாரத்தில் மட்டுமல்ல, புதிய ஒன்றியங்களில் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், தேவையற்ற இயந்திர தளவாடங்கள் கொள்முதல் மூலம் முறைகேடுகள், எந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கியது, சர்க்கரை, முந்திரி உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள், பலகோடி ரூபாய் நிலுவைத் தொகை அதில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் நடைபெற்ற முறைகேடுகள் என கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் மாறி, மாறி நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.
ஆவினுக்கான இழப்புகளை கண்டறிந்து அதனை உரியவர்களிடமிருந்து மீட்க, திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் முழுமையான சிபிஐ விசாரணை நடைபெற்றால் மட்டுமே சாத்தியமாகும். எனவே இதுபற்றி விசாரணை நடத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.