
ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலில் பணநாயகம் கொடி கட்டிப் பறப்பதைக் கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் முகத்தில் தேர்தல் ஆணையம் கரியைப் பூசி விட்டது என்பதை உணர்த்தும் விதமாக தன்னுடைய முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார் வேட்பாளர் ஒருவர்.
மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆறுமுகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர்கள் விரும்பி கேட்ட சின்னம் டம்ளர் கொடுக்கப்பட்டு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தலில் பரிசுப் பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டு வருவதும், பணப்புழக்கம் பெரிய அளவில் இருப்பதும் இவர்களுக்கு களத்தில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் தரப்பில் குக்கர், பட்டுப்புடவை, வெள்ளி டம்ளர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதிமுக தரப்பில் வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் கூட அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜனநாயக ரீதியில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் முகத்தில் தேர்தல் ஆணையம் கரியைப் பூசிவிட்டது என்று மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் வருத்தப்படுகிறார்.
``துணை ராணுவப்படையை தேர்தல் ஆணையம் கையில் வைத்திருக்கிறது. மாநில காவல் துறையையும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவை வழங்கப்படுவது குறித்து புகார்கள் அளிக்கப்பட்ட போதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் முகத்தில் கரியைப் பூசிவிட்டது. வாக்காளர்களோ கறி சோறு தின்று கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஜனநாயகம் செத்துவிட்டது என்கிற வேதனையில் இருக்கிறோம். இதனால் தேர்தல் ஆணையத்தின் செயலை வெளிக்காட்டும் வகையில் எங்கள் வேட்பாளர் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்" என்றார்.