ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பின்னடைவு: உத்தவ் தாக்கரேவுக்கு இனிப்பான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பின்னடைவு: உத்தவ் தாக்கரேவுக்கு இனிப்பான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

மும்பையின் அடையாளமான சிவாஜி பூங்காவில் தசரா பேரணியை நடத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் மூலம், ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு இன்று பெரும் அடி விழுந்துள்ளது.

மும்பை காவல்துறை எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையின் அடிப்படையில், சிவாஜி பூங்காவில் தசரா பேரணி நடத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவினருக்கு பிரஹன் மும்பை மாநகராட்சி நேற்று அனுமதி மறுத்தது. ஆனால் உத்தவ் தாக்கரே பிரிவு இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். அதில் ஷிண்டே பிரிவினர் தலையிட்டு தாக்கரே பிரிவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

சிவசேனா கட்சிக்கு உரிமை கோருவது தொடர்பான சர்ச்சை தீரும் வரை உத்தவ் தாக்கரேவின் மனு மீது முடிவு எடுக்க வேண்டாம் என்ற ஏக்நாத் ஷிண்டே அணி மும்பை உயர் நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே பிரிவின் எம்எல்ஏ சதா சர்வாங்கர், தற்போதைய மனுவின் கீழ், மனுதாரர்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவினர் சிவசேனா கட்சியின் மீது உரிமை கோர முயற்சிக்கின்றனர் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். ஆனால் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சட்டத்தின் செயல்முறையின் தெளிவான துஷ்பிரயோகம் என்று கூறி பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளது. மேலும் நீதித்துறை மீதான நம்பிக்கை நிரூபணமானது என்றும் கூறியுள்ளது. இந்த ஆண்டு தசரா பேரணி மிக பிரமாண்டமாக நடைபெறும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயண்டே தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய சிவசேனா செயலாளர் விநாயக் ராவத், “ கடந்த பல ஆண்டுகளாக, தசரா பேரணி சிவாஜி பூங்காவில் சிவசேனாவால் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த முறை தடைகளை உருவாக்க ஷிண்டே பிரிவு மற்றும் பாஜக மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது”என்று கூறினார்.

சிவசேனா 1966 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தசரா அன்று பேரணியை சிவாஜி பூங்காவில் நடத்தி வருகிறது. இப்போது சிவசேனா இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதால், இந்த ஆண்டு இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அக்டோபர் 5 ம் தேதி நடைபெறும் இந்த பேரணியில் மகாராஷ்டிராவின் வளர்ச்சிகள் குறித்து உத்தவ் தாக்கரே முக்கியமான உரையை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நீதிமன்ற தீர்ப்பு ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in