தீயாய் வேலைசெய்யும் திமுக; அபார நம்பிக்கையில் அதிமுக!

உள்ளாட்சித் தேர்தல் ரவுண்ட் -அப்
தீயாய் வேலைசெய்யும் திமுக; அபார நம்பிக்கையில் அதிமுக!

தமிழகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இத்தேர்தலில், வெற்றியை வசப்படுத்த வழக்கம்போல திமுக-அதிமுக பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் களத்தில் முந்துவது யார்?

வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவம்

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கிராமப்புறங்களில் திருவிழாதான். மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலைப் போல அல்லாமல், வாக்களர்களிடம் பரிச்சயமாக உள்ளவர்கள், தொண்டு செய்பவர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என யார் வேண்டுமானாலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளாட்சித் தேர்தலில் உண்டு. அந்த வகையில் கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக - அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமைப் பிரச்சாரங்களில் பெரிய அளவில் ஈடுபட்டதில்லை. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலுக்காக அறிக்கை வெளியிடுவது, தொலைக்காட்சிகளில் பேசுவது என்ற அளவிலேயே நின்றுகொள்வார்கள்.

இப்போதோ தேர்தல் நடைபெறுவது 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத்தான் என்றாலும், ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் அளவுக்கு திமுக - அதிமுக கட்சித் தலைமைகள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மொத்தம் 27,003 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றாலும், கட்சி சின்னத்தில் போட்டியிடும் 140 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளைப் பிடிக்க அதிரடியாகத் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்கள் அரசியல் கட்சியினர்.

தீவிரம் காட்டும் திமுகவினர்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி தேவை என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது முதலே, வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது திமுக. தேர்தல் அறிக்கையில் சொல்லியதை திமுக நிறைவேற்றவில்லை என்பதை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததால், அதற்குப் பதிலடியாக வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அமைச்சர்களையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது திமுக தலைமை. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 அமைச்சர்கள் வீதம் பொறுப்பாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் சீனியர் அமைச்சர்கள் தொடங்கி ஜூனியர் அமைச்சர்கள் வரை ஆஜராகிவிடுகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்குக்கூட யோசிக்காத ‘வார் ரூம்’ என்ற கான்செப்ட்டை, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் திமுக பயன்படுத்தியிருக்கிறது. சென்னை அறிவாலயத்தில் உள்ள இந்த ‘வார் ரூ’மில் புகார்கள், தகவல்களை உடன்பிறப்புகள் தெரிவிக்கவே பிரத்யேகமாகத் திறந்து வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் குறிப்பாக, அதிமுகவினர் பணப் பட்டுவாடா, இலவசப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டால், தேர்தல் பறக்கும் படைக்குத் தெரிவித்து பறிமுதல் செய்யும் கடமையை ‘வார் ரூம்’ செய்யும் என்கிறார்கள் உடன்பிறப்புகள். தமிழகத்தில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்குக் கிடைக்கும் அனுகூலங்களே தனிதான். ஆட்சி, அதிகாரம், பணபலம் என்ற தெம்போடு தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.

அதிமுகவில் ஆரம்பகட்ட சுணக்கம்

ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு தேர்தலை, அதுவும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது எவ்வளவு சிரமம் என்பது மற்ற கட்சிகளைவிட அதிமுகவுக்கு அதிகமாகவே தெரியும். ஆளுங்கட்சி சூத்திரத்தைப் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்ட கட்சி என்பதால், அதற்கேற்ப பணி செய்துவருகிறது அக்கட்சி. 9 மாவட்டங்களுக்கும் மாஜி அமைச்சர்கள், மா.செ-க்கள் என 3 முதல் 4 பேரைப் பொறுப்பாளார்களாக களமிறக்கியிருக்கிறது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அதிமுக முகாமில் சுணக்கம் காணப்பட்டதாகச் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

“வழக்கமாக அதிமுக ஊராட்சி ஒன்றியச் செயலாளர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியைக் குறிவைத்து போட்டியிடுவார்கள். ஆனால், தலைவர் பதவியை எப்படியும் திமுக கைப்பற்றிவிடும் என்ற எண்ணம் கட்சியினருக்கு இருப்பதால், பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர் போட்டிக்கு மாறிவிட்டார்கள். இதேபோல இந்தப் பதவி 2024-ல் காலியாகிவிடும் என்ற எண்ணமும் இருப்பதால், ‘3 ஆண்டுகளுக்காக எதற்குப் பணத்தைச் செலவழித்துப் போட்டியிட வேண்டும்?’ என்ற எண்ணமும் இருந்தது. இதனால், பல பகுதிகளில் அதிமுகவினர் தேர்தல் போட்டியிலிருந்து ஜகா வாங்கினார்கள்” என்கிறார் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர்.

இறங்கி வேலைசெய்யும் ஈபிஎஸ்

தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில் வருகின்றன. பாமக - அதிமுக கூட்டணி இருந்திருந்தால், இத்தேர்தலில் திமுகவுக்குச் சவாலாக இருந்திருக்கும். கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது அதிமுகவுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு எண்ணமும் அதிமுகவில் நிலவுகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் கட்சியில் அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகள்தான் களமிறங்கியுள்ளனர். இதையெல்லாம் அறிந்துதான் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார். மனைவியின் மறைவால் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வமும் தற்போது ஆலோசனைக் கூட்டங்களில் களமிறங்கியிருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்தோடு நின்றுவிடாமல், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடும் எண்ணத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இதனால், அதிமுகவினர் சற்று உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

உள்ளூர் பிரச்சினையைப் பேசும் தேர்தல் இது என்றாலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நீட் தேர்விலிருந்து விலக்கு ஆகியவற்றில் திமுக ஏமாற்றிவிட்டதைப் பிரதானமாக ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கட்சியினருக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்தல் வெற்றியின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நெருக்கடி தர முடியும் என்றும் வட தமிழகத்தில் பாமக கூட்டணி இல்லாமலும் தங்களால் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்க முடியும் என்றும் ஈபிஎஸ் உறுதியாக நம்புகிறார்.

பிற கட்சிகள்

கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளிக் கொடுக்காமல் கிள்ளியே கொடுக்கின்றன திமுகவும், அதிமுகவும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களிலும் திமுக - அதிமுக என இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களுமே போட்டியாகப் பல இடங்களில் களத்தில் குதித்திருக்கிறார்கள். இதனால் இரு தரப்புக் கூட்டணிக் கட்சிகள் புலம்பித் தவிக்கின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. நகர்ப்புற வாக்காளர்களைச் சற்று கவர்ந்த இக்கட்சிகள், கிராமப்புறங்களில் களத்தில் இருப்பதே தெரியாத நிலைதான். அதற்கேற்ப சீமானும், கமலும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். ஒருகாலத்தில் விழுப்புரத்தில் கோலோச்சிய தேமுதிகவைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை.

கவனம் ஈர்க்கும் பாமக

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடும் பாமக, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் செல்வாக்கு உள்ள கட்சி. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 2,981 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன. இதில் திமுக, அதிமுக தவிர்த்து 10 பாமகவினரும் அடக்கம். இக்கட்சியின் செல்வாக்கை இதன் மூலம் அறியலாம். பல கிராமங்களில் திமுக, அதிமுகவைத் தாண்டி முந்திச் செல்கிறது பாமக. இத்தேர்தலில் பெறும் கணிசமான வெற்றி, எதிர்கால அரசியலுக்கும் தேர்தல்களுக்கும் உதவும் என்பதால், பாமக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. 2014 தருமபுரி மக்களவைத் தொகுதியில், கிராமப்புறங்களில் கையாண்ட திண்ணைப் பிரச்சார உத்தியைப் பாமகவினர் கையில் எடுத்திருக்கிறார்கள்.

பணப் பட்டுவாடா

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் எவ்வளவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பு வாக்களர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் 4 வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், தற்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், நெல்லை, தென்காசியில் வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வரை தரப்படும் என்ற பேச்சு இருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஐந்தாயிரம் வரை தரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்களுக்கு தனித்தனியாக ‘அசைன்மென்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை வேட்பாளர்களிடம் கொடுக்காமல், அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்தே முடித்துக்கொள்வார்கள் என்கிறது திமுக வட்டாரம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் தேர்தல் செலவை வேட்பாளரும், வாக்காளர்களுக்கான பண விநியோகத்தை கட்சி மேலிடமும் பார்த்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த முறை பண விநியோகத்தை அதிமுகவில் யார் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பொறுப்பாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அமைதியாக இருப்பதால், வேட்பாளர்கள் பீதியில் உள்ளனர். சற்று வசதியான வேட்பாளர்கள் மட்டும், அந்தப் பணியையும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அதிமுகவில் சொல்கிறார்கள்.

2019-ல் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்து நடத்திய உள்ளாட்சித் தேர்தலிலேயே எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அதிக வெற்றிகளைப் பெற்றது. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று நம்புகிறார்கள் உடன்பிறப்புகள். மாறாக, 4 மாதங்களிலேயே திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது என்று கூறும் ர.ர-க்கள் அது தங்களுக்கு வெற்றியைத் தேடி தரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வாக்காளர்களாகிய எஜமானர்கள் என்ன தீர்ப்பை எழுதுவார்கள் என்பதை அறிய, தமிழகம் ஆவலோடு காத்திருக்கிறது!

Related Stories

No stories found.