‘8 வருடமாக ஏகப் பேச்சு....’ ‘வெறுப்பின் புல்டோசர்கள்’ - மோடியைச் சாடிய ராகுல் காந்தி

‘8 வருடமாக ஏகப் பேச்சு....’ ‘வெறுப்பின் புல்டோசர்கள்’ - மோடியைச் சாடிய ராகுல் காந்தி

டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில், ஆக்கிரமிப்பு அகற்றம் எனும் பெயரில் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. இதற்குக் காரணம் அமித் ஷா தான் என ஆம் ஆத்மி கட்சியும், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைத் திசைதிருப்பவே இந்நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியிருக்கின்றன.

டெல்லியின் ஜஹாங்கிரிபுரி பகுதியில் ஏப்ரல் 16-ல் அனுமன் ஜெயந்தி (ஆஞ்சநேயர் பிறந்ததினக் கொண்டாட்டம்) ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்தது. இதையடுத்து, வடக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் 9 புல்டோசர்களை அனுப்பி ஜஹாங்கிரிபுரியில், சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளையும் கட்டிடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவருகின்றனர். ஜஹாங்கிரிபுரியில் உள்ள சட்டவிரோதக் குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங்குக்கு டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தொடங்கின.

இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. மத ரீதியிலான மோதல்களுக்கு ஏற்பாடு செய்வதே உள் துறை அமைச்சர் அமித் ஷாதான் என்றும், அவரது வீட்டைத்தான் இடிக்க வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சட்டா.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சிகளை பாஜக ஆட்சி செய்திருக்கிறது. அதன் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு அனுமதி அளித்தனர். இன்றைக்கு இந்தச் சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்கச் சென்றிருக்கிறார்கள். உண்மையில், லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கிய பாஜக தலைவர்களின் வீடுகளும் இடிக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடப்பது போலவே, டெல்லியிலும் மதரீதியான மோதல்களைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் எனும் பெயரில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் குறிவைத்து, அவர்களின் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வீடுகள் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்களுக்கு வடக்கு டெல்லி மாநகராட்சி தரப்பிலிருந்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடப்படவில்லை என்றும் தனது மனுவில் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நபர் அமர்வு, நாளை இதுகுறித்து மீண்டும் விசாரணை நடக்கும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

எனினும், இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்தனர். மதியம் 12 மணி அளவில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத், ஜஹாங்கிரிபுரிக்குச் சென்றிருந்தார். உச்ச நீதிமன்ற ஆணையின் பிரதிகளையும் அவர் எடுத்துவந்திருந்தார். நீதிமன்ற ஆணையின்படி, இடிப்புப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிருந்தா காரத், புல்டோசர் முன்னே நின்று போராட்டம் நடத்தினார். அங்கிருந்த போலீஸாரிடமும் அவர் முறையிட்டார்.

எனினும், அதற்கான ஆணை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங் கூறிவிட்டார்.

இதற்கிடையே, மோடி அரசை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார். ‘8 ஆண்டுகள் பெரிய அளவில் பேச்சுகள் பேசப்பட்டதன் விளைவாக, இந்தியாவிடம் 8 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கும் ராகுல், ‘மோடி ஜி, தேக்கநிலை தென்படுகிறது. சிறு தொழில்களை மின்வெட்டு நசுக்கிவிடும், மேலும் பல வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும். வெறுப்பு புல்டோசர்களை அணைத்து வைத்துவிட்டு, மின் நிலையங்களை ஸ்விட்ச்-ஆன் செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

‘இந்தியாவிடம் 8 நாட்களுக்கான நிலக்கரி தான் கையிருப்பாக உள்ளது. பாஜகவின் வெறுப்பு அரசியல் வீடுகளின் (சமையலறை) நெருப்பைப் பற்றவைக்காது. தெருக்களில் நெருப்பு எரிவதற்கு அதுதான் காரணம்’ என காங்கிரஸ் கட்சியும் ட்வீட் செய்திருக்கிறது.

Related Stories

No stories found.