ஒற்றுமை யாத்திரையில் ராகுல்: 8 எம்எல்ஏக்களை கூண்டோடு தூக்கியது கோவா பாஜக!

ஒற்றுமை யாத்திரையில் ராகுல்: 8 எம்எல்ஏக்களை கூண்டோடு தூக்கியது கோவா பாஜக!

கோவா காங்கிரஸ் தலைவர்களான திகம்பர் காமத் மற்றும் மைக்கேல் லோபோ தலைமையிலான 8 எம்எல்ஏக்கள் ஆளும் பாஜகவில் இணைந்தனர்.

கோவாவில் 11 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த காங்கிரஸிலிருந்து 8 பேர் விலகியதால், தற்போது அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரை நடந்துவரும் நிலையில் இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக “முதலில் உங்கள் கட்சியை ஒன்றுபடுத்துங்கள். அப்புறம் நாட்டை ஒற்றுமைப்படுத்தலாம்” என்று கிண்டல் செய்து வருகிறது.

காங்கிரஸை சேர்ந்த திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலியா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேடார் நாயக், சங்கல்ப் அமோங்கர், அலெக்ஸிகோ செகீயூரா, ருடோல்ஃப் பெர்னாண்டஸ் ஆகிய எட்டு எம்எல்ஏக்கள் குழுவாக பாஜகவுக்கு சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவியதால், அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய இயலாது.

பாஜகவில் இணைந்ததை அறிவித்த மைக்கேல் லோபோ, "காங்கிரஸிலிருந்து வெளியேறு, பாஜகவுக்கு செல்" என்று காங்கிரஸை கேலி செய்தார். காங்கிரஸின் கூட்டாளியான கோவா பார்வர்ட் கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய், விலகிய எம்.எல்.ஏ.க்கள் "சுத்தமான தீமையின் சின்னங்கள். அவர்கள் செல்வத்தின் பேராசை மற்றும் அதிகாரத்திற்கான பசியால் எல்லாம் வல்ல கடவுளை மீறி பாஜகவில் இணைந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

திகம்பர் காமத் மற்றும் மைக்கேல் லோபோ ஆகியோர் தலைமையிலான சில உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதாக ஜூலை மாதத்திலும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து மைக்கேல் லோபோவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து காங்கிரஸ் நீக்கியது, ஆனால் மாற்றுத் தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கோவா எம்எல்ஏக்களை தக்கவைக்க மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.

கோவா காங்கிரஸ் 2019 ம் ஆண்டில் இதே பாணியில் பிளவுபட்டது. அதன் சட்டமன்ற பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 15 எம்எல்ஏக்களில் 10 பேர் பாஜகவில் இணைந்தனர். அதனால்தான் இந்த ஆண்டு தேர்தலின்போது வேட்பாளர்களை ராகுல் காந்தி முன்னிலையில் கடவுளின் பெயரில் விசுவாச உறுதிமொழி எடுக்க வைத்தது காங்கிரஸ். ஆனால் அதனையும் மீறி 8 பேர் இப்போது கட்சி தாவியுள்ளனர்.

கோவா சட்டசபையில் மொத்தமுள்ள 40 இடங்களில், பாஜகவுக்கு 20 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கு இருவர் மற்றும் மூன்று சுயேட்சைகள் உட்பட 25 பேருடன் பாஜக ஆட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இது இப்போது 33 ஆக உயரும். காங்கிரஸுக்கு இப்போது 3 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். மேலும் ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்களும், கோவா பார்வர்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், புரட்சிகர கோன்ஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in